விவேக் வாழ்ந்த பகுதிக்கு அவரது பெயர் - அரசாணை வெளியீடு

விவேக் வாழ்ந்த பகுதிக்கு அவரது பெயர் -  அரசாணை வெளியீடு
முதல்வரை சந்திக்கும் நடிகர் விவேக்கின் மனைவி

சென்னை விருகம்பாக்கத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் வாழ்ந்த பகுதிக்கு அவரது பெயரை சூட்ட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் 3 ம் தேதியன்று அந்த பகுதிக்கு விவேக் பெயர் சூட்டப்பட்டு பெயர்ப் பலகை திறக்கப்படுகிறது.

நடிகர் விவேக்
நடிகர் விவேக் Silverscreen Media Inc.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கிய நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் 25-ம் தேதியன்று நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, தன் மகள் அமிர்தாநந்தினியுடன் கோட்டைக்கு வந்து தமிழக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். விருகம்பாக்கத்தில் நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள பகுதிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் அப்போது முதல்வரிடம் மனுவாக அளித்தார்.

இந்த நிலையில் நடிகர் விவேக்கின் பெயரை அவர் வசித்த பகுதிக்கு சூட்ட வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உடனடியாக அரசாணை பிறப்பித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1,000 குடும்பங்களுக்கு ரமலான் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆழ்வார்திருநகரில் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்று ரமலான் பரிசுத் தொகுப்பினை மக்களுக்கு வழங்கி பேசினார்.

அப்போது பேசிய அவர்," ஒரு லட்சத்திற்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட மறைந்த நடிகர் விவேக், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு பிடித்த நடிகர். அப்படியொரு நடிகரான விவேக் குடும்பத்தினர் அவர் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என கொடுத்த மனுவை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விவேக் பெயரை சூட்ட வேண்டும் என அரசாணையை வெளியிட உத்தரவிட்டார். வரும் மே மாதம் 3 ம் தேதியன்று அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது'' எனப் பேசினார்.

Related Stories

No stories found.