சமூக நல்லிணக்கத்திற்காக அனைவரும் குரல் கொடுங்கள்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ வேண்டுகோள்

சமூக நல்லிணக்கத்திற்காக அனைவரும் குரல் கொடுங்கள்:  ஜவாஹிருல்லா எம்எல்ஏ வேண்டுகோள்

கியான்வாபி பள்ளிவாசல் விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும் வலிமையான கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே கியான்வாபி பள்ளிவாசல் உள்ளது. ஔரங்கசீப்பால் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலில் இந்து கோயில் இருந்ததாகவும் இங்கு தங்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என ஐந்துப் பெண்கள் கொண்டக் குழு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இதையடுத்து இது தொடர்பாக அந்த பள்ளிவாசலை வீடியோ ஆதாரத்துடன் கள ஆய்வு செய்ய வேண்டும் என வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் இந்த கள ஆய்வுக்கு பள்ளிவாசல் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இரு நாள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பள்ளிவாசலில் உள்ள உளூ செய்யும் இடத்தில் (தொழுகைக்கு முன்பு முகம், கை மற்றும் கால்கள் சுத்தம் செய்யும் தண்ணீர் தடாகம்) சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வழக்கின் மனுதாரரின் சார்பில் வழக்கறிஞர் சங்கர் ஜெயின் கள ஆய்வின் பார்வையாளர்களில் ஒருவராக அவரது மகன் விஷ்ணு ஜெயினை அனுப்பியிருந்தார். வழக்கறிஞர்கள் மற்றும் 52 பார்வையாளர்களுக்கு தம் கைபேசிகளை உள்ளே எடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.

இச்சூழலில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனவும், அவசரமாக அவரிடம் பேச வேண்டும் எனக் கூறி கள ஆய்வின் அதிகாரி ஒருவரிடம் கைபேசியை விஷ்ணு ஜெயின் வாங்கியுள்ளார். அதில் உளூ தடாகத்தை படம் எடுத்ததுடன் அதை தன் தந்தைக்கும் அனுப்பியுள்ளார். அவரது தந்தை நீதிமன்றத்தில் இப்படத்தைக் காண்பித்ததைத் தொடர்ந்து முழுமையான அறிக்கை வருவதற்கு முன்பே இந்த உத்தரவை உரிமையியல் நீதிபதி உத்தரவு பிறப்பித்து சட்டவிதிமுறைகளை அப்பட்டமாக மீறியுள்ளார். சட்டவிரோதமாக செயல்பட்ட வழக்கறிஞரின் மகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

மேலும், "முஸ்லிம் தரப்பின் ஆட்சேபத்தை செவிசாய்க்காமல் ஒருதலைபட்சமாக பள்ளிவாசலின் உளூப் பகுதியை சீலிட்டு மூட கீழமை உரிமையியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் 20 பேர் மட்டுமே தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவர் என்றும், கையகப்படுத்தப்பட்ட இடத்தில் மத்திய பாதுகாப்பு காவல்படையை அமர்த்தும் படியும், இப்பகுதியின் பாதுகாப்பிற்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பு எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உளூ செய்யும் தடாகத்தின் மத்தியப் பகுதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல, நீரூற்றுக்கான கல் என்ற முஸ்லிம் தரப்பின் வாதத்தை நீதிபதி முற்றிலும் நிராகரித்துள்ளார்.

937-ல் வாரணாசி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், கியான்வாபி வளாகம் முழுவதும் பள்ளிவாசலுக்கு சொந்தமானது எனவும், அதனுள் முஸ்லிம்கள் தொழுகை நடத்த முழு உரிமை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. 1991-ல் இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி அனைத்து வழிபாட்டுத் தலங்களும் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும், இவற்றில் எக்காரணங்கள் கொண்டும் மாற்றம் செய்யக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை மீறி இந்த உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.

பாபர் பள்ளிவாசல் வழக்கில் மாவட்ட நீதிபதி ஒருவர் வழங்கிய சட்டவிரோத தீர்ப்பு தான் பிரச்சினையின் மூலமாக விளங்கியது. அதுபோன்ற ஒரு நிலைதான் இந்த வழக்கிலும் இருப்பதாகக் கருதுகிறோம். எனவே, நாட்டு நலனிலும், சமூக நல்லிணக்கத்திலும் அக்கறைக் கொண்ட அனைத்து முற்போக்கு இயக்கங்களும், மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளும் இது விஷயத்தில் தங்களது வலிமையான கண்டனத்தைப் பதிவுச் செய்ய வேண்டும்" என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in