`சட்டப்பிரிவு 124ஐ பயன்படுத்துங்கள்'- டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம்

`சட்டப்பிரிவு 124ஐ பயன்படுத்துங்கள்'- டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம்

"தமிழக ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் செயல்பட்ட போராட்டக்காரர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124ன் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் வழியாக நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் மகேஷ் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 75 நபர்கள் கையில் கருப்பு கொடியுடன் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விரக்தியில் கொடிகளை வீசினர். உடனே போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பாஜக, அதிமுக மட்டுமே கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை, அது வதந்தி என காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே, தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியான விஷ்வேஷ் பி.சாஸ்திரி (ஐபிஎஸ்) தமிழ டிஜிபி அலுவலகத்திற்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "தருமபுரம் ஆதினத்தை சந்திக்க மன்னம்பந்தல் அருகே ஆளுநர் காரில் சென்றபோது, போராட்டக்காரர்கள் கருப்பு கொடியுடன் உள்ளே நுழைந்து தாக்க முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் சென்றவுடன் விரக்தியில் போராட்டக்காரர்கள் கொடி மற்றும் கொடி கம்பங்களை தூக்கி வீசி உள்ளனர்.

இந்த செயல் தமிழக ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் இருந்துள்ளது. அதனால் போராட்டக்காரர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 (ஏதாவதொரு சட்டப்பூர்வ அதிகாரத்தை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தும் அல்லது தடுக்கும் உள்நோக்கத்துடன் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரை தாக்குதல்) என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.