பரபரப்பான அரசியல் சூழல்... டெல்லி செல்லும் ஆளுநர்; அமித்ஷாவை சந்திக்கிறார்!

ஆளுநர் ஆர்.என்.ரவி - உள்துறை அமைச்சர் அமித் ஷா
ஆளுநர் ஆர்.என்.ரவி - உள்துறை அமைச்சர் அமித் ஷா

மூன்று நாள் பயணமாக டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி

மக்களவைத் தேர்தல் பணிகளில் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதேநேரம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றுள்ளார். தமிழகத்தில் இப்படித் தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஆளுநரும் தன் பங்கிற்கு அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சட்டபேரவையில்  ஆளுநர் உரை
சட்டபேரவையில் ஆளுநர் உரை

இந்த சூழலில் வரும் 12ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநரை உரை நிகழ்த்த வருமாறு, பேரவைத் தலைவர் அப்பாவு கடந்த 2ம் தேதி ஆளுநரைச் சந்தித்து அழைப்பு விடுத்தார். தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஆளுநர் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரை தொடர்பான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். இந்த சூழலில் இந்த கூட்டத்தொடரில் உள்ள அம்சங்கள் குறித்து ஆளுநர் விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in