‘கேரள ஆளுநரின் பேச்சு உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்’

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அறிக்கை
முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை

“முல்லை பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்டப்படும் என்ற கேரளா ஆளுநரின் பேச்சு உச்ச நீதிமன்றத்தின் ஆணையை அவமதிக்கும் செயல்” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று பேசிய ஆளுநர் ஆரிப் முகமதுகான், “முல்லை பெரியாற்றில் கேரளா அரசு சார்பில் புதிய அணை கட்டப்படும். முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்த்தக்கூடாது எனவும் ஆளுநர் ஆரிப் முகமதுகான் தெரிவித்திருந்தார்.

கேரள ஆளுநரின் உரை பெரும் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள சட்டமன்றத்தில் இன்று (18.02.2022) கேரள மாநிலத்தின் ஆளுநர் ஆற்றிய உரையில், கேரள அரசு முல்லை பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்டது. இது உச்ச நீதிமன்றம் 07.05.2014 அளித்த தீர்ப்புக்கு முரணானது. மேலும், உச்ச நீதி மன்றத்தின் ஆணையை அவமதிப்பதும் ஆகும்.

உச்ச நீதி மன்றத்தின் ஆணையில் முல்லை பெரியாறு அணை எல்லாவிதத்திலும் உறுதியாக உள்ளதாக அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. புதிய அணை தேவையில்லை. மேலும் புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்றும் தெளிவாகக் கூறியுள்ளது. இப்படியிருக்க கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இதை எல்லாவிதத்திலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும். தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காது” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in