`கர்நாடக அரசால் மேகேதாட்டுவில் ஒரு செங்கலைகூட நட முடியாது'

அமைச்சர் துரைமுருகன் காட்டம்
`கர்நாடக அரசால் மேகேதாட்டுவில் ஒரு செங்கலைகூட நட முடியாது'

"தமிழக அரசின் இசைவு இல்லாமல் கர்நாடக அரசால் மேகேதாட்டுவில் ஒரு செங்கலைகூட நட முடியாது" என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டுவில் அணை கட்ட ரூ.1000 கோடியை கர்நாடக அரசு அண்மையில் ஒதுக்கியது. இந்நிலையில், மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதியளிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்ததோடு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக கடந்த 21-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு எதிராக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த 24-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்நிலைையில், வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவுகளின் படி தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், காவிரி ஆற்றில் அணை உள்ளிட்ட எதுவும் கட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் இசைவு இல்லாமல் கர்நாடக அரசால் மேகேதாட்டுவில் ஒரு செங்கலைகூட நட முடியாது. இது கர்நாடக அரசுக்கும் நன்றாக தெரியும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது. அதற்கு கீழ்படிந்து நடப்பதுதான் இந்திய ஜனநாயகம். ஒரு மாநிலமே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று சொன்னால், பிறகு இந்தியாவில் ஒருமைப்பாடு எங்கே ஏற்படப்போகிறது?. மத்திய அரசு அவ்வளவு சுலபமாக சாய்ந்துவிடாது என்று நான் கருதுகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in