`இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதுதான் புரிந்து கொள்வார்கள்?'
தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அரசு இனியும் பாராமுகம் காட்டாமல் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே மருத்துவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழுத் தலைவர் பெருமாள்பிள்ளை இதுகுறித்து காமதேனு இணையதளத்திடம் கூறுகையில், ‘கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடமிருந்து இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இதேபோல் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசுப்பணி கேட்டும் வழங்கவில்லை. அரசாணை 354 ஐ உடனடியாக 2017 முதல் அமல்படுத்தி, அரியர்ஸ் உடன் ஊதிய உயர்வினை செயல்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையும் கிடப்பில் கிடக்கிறது. ஆறு ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள பல் மருத்துவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு உடனே நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களின் எட்டு அம்ச கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்

தமிழகத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியத்தை தருவது வேதனையளிக்கிறது. மத்திய அரசு மருத்துவர்களும், தமிழக அரசு மருத்துவர்களும் ஒரே அடிப்படை ஊதியத்தில் தான் பணியில் சேருகிறோம். ஆனால் மத்திய அரசில் பணிபுரியும் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு 13 ஆண்டுகளிலும், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு, முறையே 6 மற்றும் 3 ஆண்டுகளில் ஊதிய உயர்வு நான்கு தரப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவர்களுக்கு, 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பிறகே ஊதிய உயர்வு நான்கு தரப்படுகிறது. இதிலிருந்து தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு எந்த அளவு அநீதி இழைக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்தி வரும் நிலையில், பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், அரசு மருத்துவர்கள் அர்ப்பணிப்போடு பணி செய்து வருகிறோம். மேலும் கரோனா பேரிடரில் ஒவ்வொரு அரசு மருத்துவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய பிறகும், மருத்துவர்களின் உணர்வுகளை அரசு புரிந்து கொள்ளவில்லை. இப்போதும் இல்லாவிட்டால் இனி எப்போது தான் புரிந்து கொள்வார்கள்? எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே மதுரை, சென்னையில் தர்ணா மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ள நிலையிலும் இதுவரை கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கவில்லை. எனவே வேறுவழியின்றி அடுத்த கட்டமாக போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது என செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 11-ம் தேதி திங்கட்கிழமை சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கண்ணில் கறுப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அடுத்ததாக மே 18-ம் தேதி, புதன்கிழமை மேட்டூரில் மறைந்த மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் சாகும்வரை உண்ணாவிரதமும் தொடங்க உள்ளோம். கடந்த ஆட்சியில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவாரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். ஆனால் புதிய ஆட்சியில் உண்ணாவிரதம் இருக்க ஒருநிமிடம் கூட அனுமதிக்காமல், காவல் துறை மூலம் துரத்தப்பட்டு மருத்துவமனைக்கு வெளியே, சாலை ஓரத்தில், வெயிலில் நிறுத்தப்பட்டோம். இதனால் மருத்துவர்களின் கோரிக்கைக்காக உயிரைக் கொடுத்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் சமாதியருகே 'சாகும் வரை உண்ணாவிரதம்' மேற்கொள்ள உள்ளோம்.
கரோனா போன்ற அசாதாரண சூழ்நிலையில் கூட இந்த சமூகத்தை உயிரோட்டமாக வைத்திருக்கும் வகையில், அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களை, தங்கள் ஊதியத்திற்காக போராட வைப்பதை வரலாறு நிச்சயம் மன்னிக்காது என்பதை அரசுக்கு எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறோம். எனவே இந்தப் போராட்டங்களுக்கு முன்னதாகவே அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.