மகாமகம் முதல் சப்பரம் வரை... பேரவையில் செல்வப்பெருந்தகை- ஈபிஎஸ் காரசார மோதல்!

மகாமகம் முதல் சப்பரம் வரை... பேரவையில்  செல்வப்பெருந்தகை- ஈபிஎஸ் காரசார மோதல்!

தஞ்சாவூர் தேர் விபத்து குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மகாமகம் குளத்தில் ஏற்பட்ட விபத்து பற்றி பேசினார்.

அவரின் பேச்சிற்கு எதிர்த்து தெரிவித்து அதிமுகவினர் சட்டப்பேரவை இருக்கை முன்பு போராட்டம் செய்தனர். அத்துடன் சபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். "கும்பகோணம் மகாமக விபத்து பற்றி சட்டப்பேரவையில் பேசியது தவறு என்றும், ஜெயலலிதா பெயரை குறிப்பிட்டு சட்டசபையில் செல்வ பெருந்தகை பேசியது தவறு என்றும், திமுகவினரின் தூண்டுதல் காரணமாகவே செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்" என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியேற்றும்படி சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உத்தரவிட்டார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதிமுகவினரை வெளியேற்றியது ஏன் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில், " முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் விபத்து பற்றி தெரிந்ததும் சட்டப்பேரவையில் அதுகுறித்து தெரிவித்துவிட்டு, அங்குச் சென்று இருக்கிறார். தஞ்சாவூரில் பல வருடமாக சப்பரத் திருவிழா நடக்கிறது. இன்று அசம்பாவிதம் நடந்துவிட்டது. இதை பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எல்லா உறுப்பினர்களும் பேசினார்கள்.

இதில் செல்வப்பெருந்தகையும் கருத்து தெரிவித்தார். அவர் யாரையும் பற்றி தவறாகப் பேசவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது நடந்த மகாமக விபத்து குறித்து தான் பேசினார். அப்போது சட்டப்பேரவையில் அவை குறிப்பில் ஜெயலலிதா என்ன பேசினாரோ, அதைத்தான் இன்று அவையில் செல்வப்பெருந்தகையும் பேசினார்.

ஆனால், அதை அதிமுகவினர் அவை குறிப்பில் இருந்து நீக்கச் சொல்கிறார்கள். செல்வப்பெருந்தகை சொன்னதை நீக்க வேண்டும் என்றால், முன்பு ஜெயலலிதா பேசியதையும் நீக்க வேண்டும். அதைத்தான் எதிர்கட்சித் தலைவர் கேட்கிறாரா? செல்வப்பெருந்தகை தனது கருத்தை பதவி செய்துள்ளார். அவ்வளவுதான். அதிலும் அதிமுக உறுப்பினர்கள் பேசி முடித்து வெளிநடப்பு செய்துவிட்டனர். பின்னர் மீண்டும் வந்து தர்ணா செய்து பேச நினைப்பதில் என்ன நியாயம்? மக்கள் நமது விவாதங்களை நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அரசு எல்லா மதத்தையும் மதிக்கக் கூடிய, எல்லா மதத்திற்கும் வாய்ப்பு வழங்க கூடிய, எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தக் கூடிய அரசு. விருப்பு வெறுப்பு இல்லாத அரசு நம்முடைய அரசு" என்று அப்பாவு கூறினார்.

மேலும், " வெளிநாட்டில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியா முழுக்க சென்று பார்த்துள்ளனர். அப்போது தமிழ்நாடு வந்த அதிகாரிகளிடம் ஆளுநர் தமிழ்நாட்டை பாராட்டி பேசினார். மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று ஆளுநர் கூறினார். மதத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் முதல்வருக்கு இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்யாத ஆட்சி இங்கே நடந்து கொண்டு இருக்கிறது. எல்லா மக்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்று அப்பாவு விளக்கமளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in