கனியாமூர் பள்ளியில் மீண்டும் வகுப்புகள் தொடக்கம்: முக்கிய அறிவிப்பு வெளியீடு!

கனியாமூர்  பள்ளி
கனியாமூர் பள்ளி

கலவரத்தால் உருக்குலைந்த கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் எதிர்வரும் 27 ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 13 ம் தேதி அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் உறவினர்கள் உள்ளிட்டோர் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளாமல் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டம் கடந்த 17 ம் தேதி அன்று பெரிய கலவரமாக வெடித்தது.

கனியாமூரில் திரண்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அந்த பள்ளியை அடித்து நொறுக்கினார்கள். பள்ளியில் உள்ள பேருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. உடைமைகள் அனைத்தும் சேதமாக்கப்பட்டன. இந்த நிலையில் அங்கு வகுப்புகள் துவங்குவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. அமைச்சர்கள் எ.வ. வேலு, கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பள்ளியில் ஆய்வு நடத்தி பள்ளியை விரைவில் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

அதன் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டார். இன்று கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகம் ஆகியவர்களோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனையடுத்து 27 ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அந்த பள்ளியில் தங்கள் பிள்ளைகள் தொடர்ந்து படிக்க விரும்பாத பட்சத்தில் அவர்கள் மாற்றுப் பள்ளியில் சேர்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in