`அக்கறையையும், மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை'

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
`அக்கறையையும், மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை'

“தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை” என முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று காலை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கை தமிழக நிதிநிர்வாகத் துறைக்கு மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை என்ற எல்லையையும் தாண்டி, தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு முன்னோட்டமான கொள்கை அறிக்கையாக அது அமைந்துள்ளது. இந்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், இந்த அறிக்கையைத் தயாரிக்க உதவிய நிதித்துறைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக அரசு கடந்த ஆண்டு மே 7-ம் நாள் பொறுப்பேற்றது. பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் அதலபாதாளத்துக்குப் போனது. அதிலும் குறிப்பாக நிதித்துறை அடைந்த மிகமோசமான நிலைமை என்பது கவலைக்கிடமானது ஆகும். 5.5 லட்சம் கோடி ரூபாயைக் கடனாக வைத்துவிட்டு நிதியைச் சூறையாடிய அரசாக, அ.தி.மு.க. அரசு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. இத்தகைய நிதிநெருக்கடியான நிலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும், கடந்த காலக் கசப்புகளை சமாதானமாகச் சொல்லிக் கொள்ளாமல், பல்வேறு ஆக்கபூர்வமான உதவிகளை மக்களுக்கு கழக அரசு செய்தது.

தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகளை கடந்த பத்து மாத காலத்தில் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். கரோனா என்ற பெருந்தொற்று ஒருபக்கம், மழை வெள்ளப் பாதிப்புகள் மறுபக்கம் எனத் தமிழ்நாடு அரசுக்கு இரண்டு பக்கம் இருந்து நிதிநெருக்கடியை உருவாக்கினாலும், கழக அரசின் துல்லியமான திட்டமிடுதல்களின் காரணமாக நிதி நெருக்கடியைச் சமாளித்தோம். காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லி, காரியம் செய்வதைத் தவிர்க்கும் அரசு அல்ல கழக அரசு. அதனைத்தான் இந்த பத்து மாத காலத்தில் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம்.

கரோனா கால நிதியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்க 8,393 கோடி ரூபாய், கரோனா நிவாரணமாக 13 மளிகைப் பொருள்கள் வழங்க 1,293 கோடி ரூபாய், பொங்கல் பரிசுகள் வழங்க 1,977 கோடி ரூபாய், நகைக்கடன்களை ரத்து செய்ய 5,000 கோடி ரூபாய், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க 2,756 கோடி ரூபாய், பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்கு 74,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஒதுக்கீடு செய்து வழங்கி இருக்கிறோம்.

மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பின் மூலமாக 1,520 கோடி ரூபாயும், பெட்ரோல் விலையை குறைத்ததன் காரணமாக 1,050 கோடி ரூபாயும், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு காரணமாக 8,400 கோடி ரூபாயும், ஆவின் பால்விலையை குறைத்ததால் 270 கோடி ரூபாயும் அரசுக்கு கூடுதல் செலவு ஆகியுள்ளது. நிதி நெருக்கடி மிகுந்த சூழலிலும் இவற்றைச் செய்து காட்டி உள்ளோம். இருக்கும் நிதியை முறைப்படி கையாளுதல், தேவையான செலவினங்களை மட்டும் செய்தல், வருவாயை அதிகப்படுத்துதல், தேவையற்ற செலவுகளைக் குறைத்தல் ஆகிய திட்டமிடுதல்களின் மூலமாக அரசுக்கு வருவாய் அதிகமாகி உள்ளது. செலவு குறைந்துள்ளது. அதைவிட முக்கியமாக வருவாய்ப் பற்றாக்குறை என்பதும் குறைந்துள்ளது. இது மிகமுக்கியமான சாதனையாகும்.

மாநிலத்தின் வரி வருவாய் பாதித்த நிலையிலும் இந்தச் சாதனை செய்யப்பட்டுள்ளது. சமூகநலத் திட்டங்களில் எந்தக் குறையும் வைக்காமல், வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து நிதிநிர்வாகத்தையும் வளர்த்துள்ளோம் என்பதை இந்த நிதிநிலை அறிக்கை எடுத்துக் காட்டி உள்ளது. இதே 'திராவிட மாடல்' பாணி தொடரும் என்பதையும் இந்த நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது.

அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பில் சேரும் மாணவியர்க்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலமாக மாணவிகள் அனைவரும் இனி கல்லூரிகளை நோக்கி வருவார்கள். சமூகத்தில் அவர்களது பங்களிப்பு என்பது இனி எக்காரணம் கொண்டும் பள்ளிக்கல்வியோடு தடைபடாது. அதுபோல் அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளையும் மேம்படுத்துவதற்காக பேராசிரியர் அன்பழகனார் பெயரில் செய்யப்பட உள்ள சீர்திருத்தமானது தமிழகத்தில் கல்வி கற்கும் சூழலை வளமானதாக ஆக்கும். மனநிறைவான சூழலை உருவாக்குவதன் மூலமாக தமிழகத்தின் பள்ளிக் கல்வியானது சீரானதாக மாறும்.

ஆண்டுக்கு ஐந்து லட்சம் இளைஞர்களை மேம்படுத்தும் எனது கனவுத்திட்டமான, 'நான் முதல்வன்' திட்டமும், இல்லம் தேடிக் கல்வி, ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவோருக்கான பயிற்சி என தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தை முழுமையாக முன்னேற்றும் குறிக்கோளை நோக்கமாகக் கொண்டு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. மகளிர் உரிமைத் தொகை தருவதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக நிதி அமைச்சர் வாக்குறுதியை உறுதி செய்துள்ளார்.

நீர்நிலைகள் பராமரித்தல், உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவம், மகளிர் நலம், சுற்றுலா, இந்துசமய அறநிலையத் துறை, சூழலியல், சாலைகள், பாலங்கள், அணைகள், சமத்துவபுரங்கள் சீரமைப்பு, புதிய மாநகராட்சிகளுக்கு நிதி, புதிய நகராட்சிகளுக்கு நிதி, சிங்காரச் சென்னைத் திட்டம், திறன்மிகு நகரங்கள் மேம்பாடு, குடிநீர்த் திட்டங்கள், மதுரவாயல் - சென்னை துறைமுகம் இரட்டை அடுக்கு உயர்மட்டப் பாலம், புதிய டீசல் பேருந்துகள், புதிய மின் பேருந்துகள், புத்தொழில் மையங்கள் என அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் நோக்கிய பயணத்துக்கான கலங்கரை விளக்கமாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

அதோடு, தந்தை பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் எடுத்துச் செல்ல வழிவகுத்திருக்கும் இந்த நிதிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் அறிவிப்பு, பழமைவாத கருத்துகள் என்னும் இருள் கவ்வியிருக்கும் பகுதிகளுக்கு, அறிவொளி பாய்ச்சும் அறிவிப்பாக அமைந்திருக்கிறது. “இந்த நிதிநிலை அறிக்கை என்பது ஒரு மாபெரும் மாற்றத்துக்கான தொடக்கம்" என்று நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார்கள். மாற்றத்துக்கான தொடக்கம் மட்டுமல்ல, மேன்மையடையும் தமிழ்நாடு என்பதற்கான தொடக்கமாகவே நான் கருதுகிறேன். பத்தாண்டு காலச் சரிவைச் சரிசெய்வது மட்டுமல்ல, அடுத்த 25 ஆண்டு கால உயர்வை உணர்த்துவதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற நூற்றாண்டு கால திராவிட, சமூகநீதிக் கொள்கைகளையும், இக்கால நவீனத் தேவைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. இந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்திக் காட்டினாலே உன்னதமான தமிழ்நாடு நம் கண்முன்னே உருவாகிவிடும். அத்தகைய தொலைநோக்குப் பார்வையை இந்த அறிக்கை கொடுக்கிறது. தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்டதாக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.