
இளையராஜா விவகாரத்தில் கி. வீரமணி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த நூலில் அம்பேத்கரையும், மோடியையும் ஒற்றுமைப்படுத்தி இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். இதற்கு இளையராஜாவிற்கு எதிராக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இளையராஜாவை பாஜகவினர் ஆதரித்தனர். அத்துடன் இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
இந்த நிலையில், ஈரோட்டில் நடந்த விழா ஒன்றில் இளையராஜா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசிய பேச்சு கடும் விமர்சனத்தை உருவாக்கியது. " உணவுக்கு வழியில்லாமல் இருந்த நிலையில் கம்யூனிஸம் பேசிவிட்டு பணமும், புகழும் வந்தவுடன் தங்களை உயர்ந்த சாதி என நினைத்துக் கொள்கிறீர்களே" என விமர்சித்து பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
இதுகுறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், " 'பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்தசா தி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி.வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சர்ச்சை பேச்சு குறித்து தொடர்பாக தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் தானாக புகார் பதிவு செய்து விசாரித்தது. இந்த நிலையில் கி.வீரமணி மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல் ஆணையர், சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.