‘ரூ.1 கோடியைக் காணோம்..’: அப்பாடக்கரை அமுக்கியது போலீஸ்!

லோகநாதன்
லோகநாதன்

சேலம் அருகே கரும்பு தோட்டத்தில் ரூ.1 கோடியை புதைத்து வைத்துவிட்டு திருடு போனதாக நாடகமாடிய நபரை, தலைவாசல் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய் புதுார் அருகே சாமியார் கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி லோகநாதன்(45). இவர் கடந்த 7-ஆம் தேதி தனது மனைவி ரேவதி மற்றும் மகன், மகளுடன் அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார். பின் வீடு திரும்பியபோது வீட்டின் பின்புற பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பீரோவும் திறந்திருந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த லோகநாதன் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த கால் பவுன் தோடு மற்றும் ரூ.43 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றுடன் வீட்டின் மற்றொரு பகுதியில் பெரிய பையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி ரொக்கமும் கொள்ளை போனதாக புலம்பினார். தொடர்ந்து தலைவாசல் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தலைவாசல்  போலீஸார், அதன் முடிவில் லோகநாதன் வீட்டில் திருடு எதுவும் போகவில்லை என்பதையும் அவர் நாடகம் ஆடுகிறார் என்பதையும் கண்டறிந்தனர். 

சார்வாய்புதூர் அருகே உள்ள மணிவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான கணேசன்(60) என்பவர் லோகநாதனிடம் ரூ.2 கோடி ரொக்கத்தை கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். பணத்தை வாங்கிய லோகநாதன் அதில் ரூ.1 கோடியை எடுத்து வீட்டு அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் புதைத்து வைத்துவிட்டு பணம் மாயமானதாக நாடகமாடி உள்ளார். 

போலீஸார் விசாரணையில் உண்மை வெளியானதை அடுத்து லோகநாதன் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவர் கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி பணத்தையும்  போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in