ஆம்னி பேருந்துகளில் மீண்டும் கட்டணக் கொள்ளை! கொந்தளிக்கும் பயணிகள்

ஆம்னி பேருந்துகளில் மீண்டும் கட்டணக் கொள்ளை! கொந்தளிக்கும் பயணிகள்

தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களை பயன்படுத்திக்கொண்டு ஆம்னி பேருந்துகள் மீண்டும் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். கட்டணத்தை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறையின்போதும் சென்னை, கோவை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து பல லட்சம் பேர் சொந்த ஊர் செல்வது வழக்கம். அரசுப் பேருந்து, ரயில்களில் இடம் கிடைக்காமல், பலரும் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடும் நிலையில், அவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுகிறது.

ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்சமாக இருக்கைக்கு ரூ.1,200 வசூலிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகள் என குடும்பமாக செல்ல ரூ.4,500 செலவு செய்ய வேண்டியுள்ளது. திரும்பி வருவதற்கு ரயிலில் தத்கால் முறையில் பயணச்சீட்டு கிடைக்காவிட்டால், மீண்டும் ரூ.5 ஆயிரம் அல்லது அதற்கு மேல் செலவழிக்க வேண்டியுள்ளது. பண்டிகையின்போது இது பெரும் பொருளாதார சுமையாக இருக்கிறது. ஆம்னி பேருந்துகள் அதிககட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தனியார் ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.3,200, நெல்லைக்கு ரூ.3,400, கோவைக்கு ரூ.3,999 என, மக்களை கசக்கி பிழியும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மாத தொடர் விடுமுறையின்போது, மொத்தம் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அவற்றில் 2,092 பேருந்துகளுக்கு மட்டுமே ரூ.37 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை அரசு இனியும் அனுமதிக்க கூடாது. உயர் நீதிமன்ற தீர்ப்புகளை கருத்தில் கொண்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்களோ, ‘‘சுற்றுலா பேருந்துபோல இயக்கப்படுவதால், ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் என்பது கிடையாது. உரிமையாளர்களே கட்டணத்தை நிர்ணயித்து, பேருந்துகளை இயக்கி வருகிறோம். சமீபத்தில் அமைச்சர் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, கட்டணத்தை மேலும் 5சதவீதம் குறைத்துள்ளோம். http://www.toboa.in மற்றும் http://www.aoboa.in ஆகிய இணையதளங்களில் ஆம்னி பேருந்து கட்டண பட்டியலை தெரிந்து கொள்ளலாம்’’ என்றனர்.

போக்குவரத்து துறை அதிகாரிகளோ, ‘‘ஆம்னி பேருந்துகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பேருந்து நிலையங்களிலும் சோதனை நடத்துகிறோம். விதிமீறிய ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்’’ என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in