`உழவர் நலனை அரசு நிச்சயம் பாதுகாக்கும்'- முதல்வர் ஸ்டாலின்

மேகேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானம் நிறைவேற்றம்
`உழவர் நலனை அரசு நிச்சயம் பாதுகாக்கும்'- முதல்வர் ஸ்டாலின்

"மேகேதாட்டு அணைக்கு அனுமதி தரக்கூடாது என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்" என்றும் "தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, தமிழ்நாட்டு உழவர் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும்" என்றும் சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் மேகேதாட்டு அணை தொடர்பான தனி தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், "காவிரி பிரச்சினையில் யார் சரியாக செயல்பட்டார் என்று மோதிக் கொள்வதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து அணை கட்டுவோம் என்று கர்நாடகா கூறுவது அடாவடித்தனம். தண்ணீருக்காக தமிழ்நாடு கேரளத்திடமும், கர்நாடகத்திடமும் கையேந்தும் நிலை உள்ளது. கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்க அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் காவிரி பிரச்சினையில் ஒரே அணியாக இருக்கின்றனர். தமிழநாட்டில் திமுக கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுகவும், அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை திமுகவும் ஆதரித்தது. காவிரி பிரச்சினைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும். அண்டை மாநிலத்துடன் நல்லுறவை பேணும் நேரத்தில் நமது உரிமையையும் விட்டுக்கொடுக்கக்கூடாது" என்றார்.

இதையடுத்து, தீர்மானம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகேதாட்டு விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாகவும், பாஜக தனிப்பட்ட முறையில் மத்திய அரசிடம் இது குறித்து நிச்சயமாக வலியுறுத்தும் எனவும் நயினார் நாகேந்திரன் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக காவிரி நீர் உள்ளது. மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மூலம் காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது" என்று கூறினார்.

இதன் பின்னர், மேகேதாட்டு தனி தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ``அனைத்துக் கட்சிகளும் மேகேதாட்டு தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேகேதாட்டு விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கையை திமுக அரசு எடுக்கும். எந்த நிலையிலும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்கும். தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்; நிச்சயம் வெற்றி பெறுவோம். மேகேதாட்டு அணைக்கு அனுமதி தரக்கூடாது என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, தமிழ்நாட்டு உழவர் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும்" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in