ஈபிஎஸ்- செந்தில்பாலாஜி கடும் வாக்குவாதம்: மின்தடையால் சட்டப்பேரவையில் நடந்த களேபரம்!

ஈபிஎஸ்- செந்தில்பாலாஜி கடும் வாக்குவாதம்: மின்தடையால் சட்டப்பேரவையில் நடந்த களேபரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், " கோடைகாலத்தில் மின்சாரத்தேவை அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் மின்தடை நிலவுகிறது. சட்டீஸ்கரிலிருந்து தமிழ்நாடு வரை மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழக அரசு முறையாக மின்சாரத்தைப் பெறவில்லை. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகிறது. தடையில்லா மின்சாரம் கொடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்துப் பேசுகையில், " மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் தடைபட்டால் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளது. உடனடியாக முதல்வரின் போர்க்கால நடவடிக்கை காரணமாக மின்தடை சரி செய்யப்பட்டது. கடந்த காலங்களில் 5 சதவீத மின்தேவையைக்கூட அதிகரிக்கக்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேவைக்கேற்ப மின்சாரம் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது" என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், " தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், நமக்குத் தேவையான அளவு மின் உற்பத்தி செய்வதுடன், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இருந்த போதும் தொழிற்சாலைகளுக்கோ, மக்களுக்கோ மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்கள் ஏற்பட்ட மின்தடையும் சரி செய்யப்பட்டு விட்டது. பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்தித்து தேவையான நிலக்கரி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இன்றும் கடிதம் எழுதியுள்ளார். குஜராத், மகாராஷ்டிராவில் நிலக்கரி பற்றாக்குறையைக் காரணம் காட்டி மின்தடையை அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்தவித தடையும் இல்லாமல் சீராக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மே மாதத்திற்கான நிலக்கரி தேவையைக் கணக்கில் கொண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும்" என்று கூறினார்.

மேலும், " எதிர்க்கட்சி தலைவர் தான் இந்த பிரச்சினையை மிகைப்படுத்தி பேசுகிறார். குறிப்பாக அதிமுக ஐடி டீம் தான் இந்த விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் 41 இடங்களில்தான் மின் தடை ஏற்பட்டது. ஆனால், இதை வேறு மாதிரி அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்" என்றார்.

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, " அதிமுக ஆட்சி காலத்தில் கோடைகாலத்தில் 17 ஆயிரத்து 210 மெகாவாட் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியிலும் மின்வெட்டு. தற்போதைய ஆட்சியிலும் மின்வெட்டு எனக்கூறி அதிமுக வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளிநடப்பு செய்தார். அவருடன் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in