`நீட் தேர்வில் தும்பைவிட்டு வாலைப் பிடித்ததுபோல் விட்டுவிடாதீர்கள் முதல்வரே'

ஸ்டாலினை வலியுறுத்தும் ஓபிஎஸ்
`நீட் தேர்வில் தும்பைவிட்டு வாலைப் பிடித்ததுபோல் விட்டுவிடாதீர்கள் முதல்வரே'

"மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட இருக்கும் பொது நுழைவு தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும்" என தமிழக அரசுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நீட் தேர்வினை ரத்து செய்ய இயலாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில், 2022-2023-ம் கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம்தான் நடக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகக்கூடும்.

மாணவர்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு எந்த பங்கும் இருக்காது. அவர்களது மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு சேர்க்கை நடைபெறும். இதனால், மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், வெவ்வேறு வாரியங்களால் ஏற்று கொள்ளப்பட்ட மதிப்பீட்டு முறைகளில் பன்முகத்தன்மை உள்ள சூழலில், மாணவர்கள் சேர்க்கைக்கு 12-ம் வகுப்பு வாரிய மதிப்பெண்கள் பயன்படுத்துவதற்கு அரசு விரும்பவில்லை. இதுதவிர, சில கல்வி வாரியங்கள் மற்றவர்களைவிட தாராளமாக மதிப்பெண்கள் வழங்குகின்றன. இது, அனைத்து வாரியங்களில் பயிலும் மாணவர்களுடன் ஒப்பிடுகையில், குறிப்பிட்ட வாரியங்களில் பயிலும் மாணவர்களுக்கு நியாயமில்லாத கூடுதல் நன்மையாக அமைகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இதற்கு பெயரளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் அல்லாமல், இந்த நுழைவுத் தேர்வு விஷயத்திலாவது, காலந்தாழ்த்தாமல் நுழைவுத் தேர்வு அறிவிப்பினை திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.