கோவை வனக்கோட்டத்தில் யானைகள் உயிரிழப்பின் பின்னணியில் உள்ளது யார்?

பைல் படம்
பைல் படம்

கோவை வனக்கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 9 யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த வனக்கோட்டத்தில் ஏராளமான யானைகள் இறந்து வரும் நிலையில் திடீரென குழு போட்டு விசாரணை நடத்தப்படுவது ஏன் என விசாரணையைத் துவக்கினோம்.

உயிரினங்களிலேயே மிகப்பெரிய விலங்காக கருதப்படும் யானைகளின் ஆயுட்காலம் 70 ஆண்டுகளாகும். மனிதனைப் போல வாழும் காலம் கொண்ட யானைகளின் ஆயுள் இந்தியாவில் மிகக்குறைவாகவே உள்ளது. இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளில் 1,160 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கும் புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

உலகில் ஆப்பிரிக்காவிற்கு அடுத்து யானைகள் அதிகம் வாழும் இரண்டாவது நாடு இந்தியா தான். இங்கு சுமார் 27,312 ஆசிய யானைகள் உள்ளன. இதில் தென்னிந்தியாவில் மட்டும் 11,960 யானைகள் உள்ளன. காடுகள் வளர்ச்சியில் மிகப்பெறும் பங்கு வகிக்கும் யானைகள் குறித்த கணக்கெடுப்பை மத்திய அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்தியாவில் கடந்த 2012- ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 30 ஆயிரம் யானைகள் இருந்துள்ளன. ஆனால், 2017-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 27,312 என்று பதிவாகியுள்ளது. அப்படியென்றால் சுமார் 3 ஆயிரம் யானைகள் என்ன ஆயின?

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தான் யானைகள் அதிகம் வாழ்கின்றன. குறிப்பாக கோவை வனக்கோட்டம் பகுதியில் அடர்ந்து வளர்ந்த காட்டுப்பகுதியில் யானைகள் அதிகம் உள்ளன. இங்கு தான், கடந்த 2 மாதங்களில் 9 யானைகள் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மின்வேலி, உடல் நலன் குன்றி என அதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதுகுறித்து விசாரிக்கத்தான் தமிழக அரசு குழு அமைத்துள்ளது.

கோவை சதாசிவம்
கோவை சதாசிவம்

கோவையில் பல ஆண்டுகளாக வன உயிர்கள் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சூழலியலாளர் கோவை சதாசிவத்திடம் யானைகள் மரணம் குறித்து பேசினோம். “எந்த யானையும் காட்டில் இயற்கையாக இறந்ததாக தெரியவில்லை. பிறந்து 8 ஆண்டில் யானை இறந்து விடுவது இயற்கையில் ஏற்பட்ட மரணமா என்ற கேள்வியை எழுப்புகிறது. அண்மையில் யானையோடு யானை சண்டை போடும் சம்பவம் அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம் வாழ்விடப் பிரச்சினை தான். அவைகளுக்கான வாழ்விடம் அழிக்கப்பட்டு, சுருங்கிப் போனதால், இருப்பிடத்தைத் தக்க வைக்க யானைகள் மோதுகின்றன. வாழ்விடம் சுருங்கும் போது யானைகளுக்கு நீர் , உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. அது மற்ற யானைகளோடு மோதுவது இயற்கையில் இன்று ஏற்பட்டிருக்கிற துயரம்" என்று கூறினார்.

யானைகள் இறப்பிற்கு இது மட்டுமே காரணமா என்று அவரிடம் கேட்டோம். “ஒவ்வொரு யானை இறந்த பிறகும் உடற்கூறாய்வு செய்யப்படுகிறது. அப்போது யானைகளை நோய்த் தாக்கியதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது பெரும்பாலும் மனிதர்களைத் தாக்கும் நோய்களாகத்தான் இருக்கின்றன. இதற்குக் காரணம் யானைகளின் வாழ்விடத்திற்கு மிக அருகில் மனிதர்கள் வாழ்விடம் சென்றுவிட்டதுதான் காரணம். பழங்குடி அல்லாத மனிதர்களின் எண்ணிக்கை காடுகளில் அதிகரித்திருப்பது தான் யானைகளின் ஆயுள் குறைவதற்கு மிக முக்கியமான காரணமாகும். அத்துடன் யானைகள் வாழும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள், காட்டின் நெஞ்சைக் கீறி அமைக்கப்படுகிற தண்டவாளங்கள் ஆகியவை அவைகளின் இறப்பிற்கு காரணமாக உள்ளன. இவை மட்டுமின்றி நாட்டு வெடிகுண்டு (அவுட்டுக்காய்) வைத்து யானைகள் கொல்லப்படுவதும் தொடர்கிறது. யானைகள் விரும்பிச் சாப்பிடுகிற பலா, தர்பூசணி பழங்களுக்குள் நாட்டு வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். இவற்றைச் சாப்பிடும் யானைகள் தலை சிதறி செத்துப் போகின்றன" என்றார்.

யானைகளைக் காக்க என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டதற்கு, "மிஞ்சியுள்ள யானைகளைக் காப்பாற்ற அரசு கவனம் செலுத்தினால் காடுகளைக் காப்பாற்ற முடியும். காடுகளைக் காப்பாற்றினால் நீராதாரத்தைக் காக்க முடியும். நீராதாரத்தைக் காப்பாற்றினால் அதை நம்பி சமவெளியில் உள்ள மக்களைக் காக்க முடியும். அதற்கு யானைகளின் வலசைப்பாதைகள் அழிக்கப்பட்டு நகர்மயமாகி வருவதைத் தடுக்க வேண்டும். அத்துடன் யானைகள் வசிக்கும் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்களில் சென்ஸார் கருவி, வேகக்கட்டுப்பாடுக் கருவி ஆகியவற்றை அமைக்க வேண்டும். அத்துடன் இதுவரை யானைகள் எப்படி இறந்தன என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறினார்.

வனம் சந்திரசேகர்
வனம் சந்திரசேகர்

கோவை வனக்கோட்டத்தில் யானைகள் இறப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் வனம் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் தலைவர் சந்திரசேகரிடம் பேசினோம். "மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள் பெருமளவிற்கு உயிரிழப்பதற்கு வனத்துறையினரின் அலட்சியம் தான் காரணம். இந்த கோட்டத்தில் உள்ள ஏழு ரேஞ்சுகளில் ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும், கனிமவளம் எடுப்பதற்காகவும் நிறைய யானைகள் கொல்லப்பட்டுள்ளன. யானைகள் எண்ணிக்கை அதிகரித்தால் ரியல் எஸ்டேட்டோ, குவாரிகளோ அமைக்க முடியாது என்பதால் அவர்கள் யானைகளைக் கொல்கிறார்கள். மேலும் காடுகளில் சட்டவிரோதமாக தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் உள்ள கெமிக்கலைக் குடித்து யானைகள் சாவதும் தொடர்கிறது. இவற்றைத் தடுக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்" என்று குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக மாவட்ட வனத்துறை அலுவலர் டி.கே.அசோக்குமாரிடம் கேட்டபோது, "கடந்த 2 மாதங்களில் கிட்டத்தட்ட 8 யானைகள் இறந்துள்ளன. குறிப்பாக யானைகளுக்குள் நடக்கும் மோதல்கள் அவற்றின் உயிரிழப்பு அதிக காரணமாக உள்ளது. மின்வேலியில் சிக்கி ஒரு யானை இறந்தது. வயது மூப்பின் காரணமாக உடல்நலன் பாதிக்கப்பட்ட ஒரு யானைக்கு சிகிச்சை அளித்தோம். ஆனாலும் உயிரிழந்து விட்டது. ஒரு யானை வாய்ப்பகுதி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அதற்குரிய சிகிச்சை அளித்தும் பிழைக்கவில்லை. சமூகவிரோதிகள் வைத்த நாட்டு வெடிகுண்டால் இந்த சம்பவம் நடந்ததா என விசாரணை நடத்தி வருகிறோம். யானைகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in