சாலைகளின் ஓரங்களில் அமைக்கப்படும் மின்கம்பங்களை வேகத்தடைகளுக்கு அருகில் அமைக்காமல் சற்றுத் தள்ளி பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பழைய மின்கம்பங்கள் அகற்றுதல் மற்றும் புதிய மின் கம்பங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றி புதிய மின் கம்பங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அகற்றப்பட்ட பழைய மின்கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் வேகத்தடைக்கு அருகே இருக்கும் மின்கம்பங்களை சற்று தள்ளி அமைக்க வாய்ப்புள்ளதா என்று பார்த்து அதற்கேற்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்கம்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து மின்வாரிய அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் மின்சார வாரியம் சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.
நெடுஞ்சாலைகளில் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடையை கவனிக்காமல் சென்று வேகத்தடை மீது ஏறி நிலை குலையும்போது அவை அருகில் உள்ள மின்கம்பங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. இதில் இரண்டு தரப்பிற்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது. உயிர் பலியும் நேரிடுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மின்சார வாரியம் தற்போது இத்தகைய அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.