`அந்த நிலையை நம்மால் அடைய முடியும்'- முதல்வர் ஸ்டாலின் உறுதி

`அந்த நிலையை நம்மால் அடைய முடியும்'- முதல்வர் ஸ்டாலின் உறுதி

``கல்வி, வேலைவாய்ப்புகளில் எந்த மாநிலத்திற்கும் சளைத்தது அல்ல தமிழ்நாடு என்ற நிலையை நம்மால் அடைய முடியும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரூ.500 கோடி மதிப்பிலான காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ``சிப்காட் தொழிற்பூங்காவில் லோட்டஸ் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நட்டப்பட்டுள்ளது. பெலாக்குப்பத்தில் 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் காலணி பூங்கா அமைய உள்ளது. மாசுவை கட்டுப்படுத்த தோல் இல்லாத காலணிகளை தயாரிக்க தொழில் நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும். பட்டாசு மற்றும் காலணி தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் பெண்கள் அதிக அளவில் பணி புரிந்து வருகின்றனர். தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி பெற, அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. அனைத்து துறைகளும் சம விகிதத்தில் வளர வேண்டும் என்பதே திமுக அரசின் இலக்கு.

சமூக அமைதியும், தொழில் வளர்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு திமுக அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது. தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 10 மாத கால ஆட்சியில் தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான தொழில் நிறுவனங்கள் வருகின்றன. தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும். கல்வி, வேலைவாய்ப்புகளில் எந்த மாநிலத்திற்கும் சளைத்தது அல்ல தமிழ்நாடு என்ற நிலையை நம்மால் அடைய முடியும்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வந்துள்ளன. அனைத்து மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி பெறும் வகையில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க நிறுவனங்கள் முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் வெளிப்படையான அரசு நிர்வாகம் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான். 2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு எட்டும்'' என கூறினார்.

Related Stories

No stories found.