நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது இ-பாஸ் திட்டம்... நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்!

கல்லார் சோதனைச்சாவடி அருகே நீலகிரி செல்ல இ-பாஸ் சோதனை தீவிரம்
கல்லார் சோதனைச்சாவடி அருகே நீலகிரி செல்ல இ-பாஸ் சோதனை தீவிரம்

நீலகிரி, கொடைக்கானல் மலைப்பிரதேசங்களுக்கு செல்ல நேற்று நள்ளிரவு முதல் இ-பாஸ் திட்டம் அமலுக்கு வந்துள்ளதால், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

கோடை சீசனின் போது நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய மலைப்பிரதேசங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படை எடுக்கின்றனர். இதனால் மலைப் பாதைகளில் கடுமையான வாகன நெரிசல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சமீபத்தில் உயர்நீதிமன்றம் மலைப்பிரதேசங்களுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி தமிழ்நாடு அரசு இ-பாஸ் வழங்குவதற்கு என தனி இணையதளத்தை துவங்கி 4 விதமான இ-பாஸ்களை வழங்கி வருகிறது.

இ-பாஸ் சோதனை காரணமாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்
இ-பாஸ் சோதனை காரணமாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

சுற்றுலா பயணிகள் இந்த இ-பாஸ் எடுத்திருந்தால் மட்டுமே நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து மாவட்ட எல்லைகளில் போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி இ-பாஸ் பெறப்பட்டுள்ளதா என்பதை அவர்கள் உறுதி செய்து வருகின்றனர்.

நீலகிரி செல்ல குவிந்து வரும் வாகனங்கள்
நீலகிரி செல்ல குவிந்து வரும் வாகனங்கள்

நீலகிரி மாவட்டத்திற்கு கோவை மற்றும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள், மாவட்ட எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்ல முதல் நாளான இன்று மொத்தம் 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவை-நீலகிரி மாவட்ட எல்லையான கல்லார் சோதனைச் சாவடியில் மாவட்ட வருவாய்த் துறையினர் காலை 6 மணி முதல் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பாஸ் இன்றி நீலகிரி மாவட்ட எல்லைக்குள் நுழைய முயலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.

கொடைக்கானல் நீர்வீழ்ச்சி அருகே இ-பாஸ் சோதனையில் வருவாய்த்துறையினர்
கொடைக்கானல் நீர்வீழ்ச்சி அருகே இ-பாஸ் சோதனையில் வருவாய்த்துறையினர்

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வருவாய்த்துறை பணியாளர்கள் இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்களை கொடைக்கானலுக்குள் அனுமதித்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கு வலைதளத்தில் முயன்று வருவதால் இ-பாஸ் வலைதளம் அடிக்கடி முடங்கி வருகிறது. இதே போல் உள்ளூர் வாகன உரிமைதாரர்களின் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவற்றை விரைவாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in