வழிகேட்ட மாற்றுத்திறனாளிகளைத் தாக்கிய போதை போலீஸ்காரர் கைது!

வழிகேட்ட மாற்றுத்திறனாளிகளைத் தாக்கிய போதை போலீஸ்காரர் கைது!

சென்னையில் மது போதையில், பார்வை மாற்றுத்திறனாளிகளைத் தாக்கியதாக நேற்று காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட காவலர் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டார்.

திருச்சி காரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் (36), காரைக்கால் கண்ணப்பூரைச் சேர்ந்த தினேஷ்(27) ஆகிய இருவரும் பிறவியிலேயே பார்வை மாற்றுத்திறனாளிகள். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சென்னையில் தங்கியிருந்து ஊதுபத்தி வியாபாரம் செய்துவருகின்றனர். நேற்று இவர்கள் இருவரும் பாபு ஜெகஜீவன் ராம் சாலை சந்திப்புப் பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அதே பகுதியில் தினேஷ்குமார்(39) என்பவர் நின்றுகொண்டிருந்தார். மதுபோதையில் இருந்த அவர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக உள்ளார்.

தினேஷ்குமாரிடம் பார்வை மாற்றுத்திறனாளிகளான விஜயகாந்தும், தினேஷும், ‘ஓ.வி.எம் தெருவுக்கு எப்படிச் செல்ல வேண்டும்? அது எங்கே உள்ளது?’ எனப் பாதை கேட்டனர். உடனே, ‘போலீஸ்காரரிடமே வழி கேட்க என்ன தைரியம் உங்களுக்கு?’ எனக் கூறி அவர்கள் வைத்திருந்த வாக்கிங் குச்சியைப் பிடுங்கி அவர்களை தினேஷ்குமார் சரமாரியாகத் தாக்கினார். இதைத் தட்டிக்கேட்ட அந்தப் பகுதிவாசிகளையும் தாக்க முயன்றார்.

இதையடுத்து பொதுமக்கள் தினேஷ்குமாரைப் பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு விசாரணை நடத்தியதில் தினேஷ்குமார் தொடர்ச்சியான மருத்துவ விடுப்பில் இருப்பதும், அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

பார்வை மாற்றுத்திறனாளிகளைத் தாக்கியதாக நேற்று விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட தினேஷ்குமார், கைது செய்யப்பட்டு இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.