திமுக 1 கோடி, எம்எல்ஏக்கள் ஒரு மாத சம்பளம்: இலங்கை மக்களுக்கு உதவ ஸ்டாலின் அறிவிப்பு

திமுக 1 கோடி, எம்எல்ஏக்கள் ஒரு மாத சம்பளம்:  இலங்கை மக்களுக்கு உதவ ஸ்டாலின் அறிவிப்பு

நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக திமுக சார்பில் முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடியும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தையும் வழங்குவார்கள் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி” என்பது வள்ளுவர் வாக்கு. “உலகம் உண்ண உண்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன். எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம். அந்த வகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக, 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் விரைவில் அனுப்ப உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

மேலும், "நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். இத்துடன், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்பதையும் திமுக தலைவர் என்ற முறையில் அறிவிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.