அரசியலில் சலிப்பு என்பது தற்கொலைக்குச் சமம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் கருத்து!

அரசியலில் சலிப்பு என்பது தற்கொலைக்குச் சமம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் கருத்து!
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், 1976-ல் திமுகவில் இணைந்தவர். 1986-ல் செஞ்சி பேரூராட்சித் தலைவரானார். தொடர்ந்து 2016 வரை 5 முறை பேரூராட்சித் தலைவராக பதவிவகித்த அவர், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தன் மகன் மொக்தியார் அலியைப் போட்டியிட வைத்தார். வெற்றி பெற்ற தன் மகனைப் பேரூராட்சித் தலைவராக்கி 6 முறையாக மீண்டும் செஞ்சி பேரூராட்சியைத் தன் வசப்படுத்திக்கொண்டுள்ளார்.

தந்தையும் மகனும் முக்கியப் பொறுப்புகளுக்கு வந்திருப்பதை முன்னிட்டு ‘காமதேனு’ இணையதளம் சார்பில் செஞ்சி மஸ்தானிடம் பேசினோம். “பொதுவாக ஒருவர் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் அவரது நிர்வாகத்தின் மீது ஒரு சலிப்பு ஏற்படும். ஆனால் தொடர்ந்து 6 முறை எப்படி உங்களால் வெற்றி பெற முடிந்தது? உங்கள்மேல் செஞ்சி வாழ் மக்களுக்குச் சலிப்பு ஏற்படவில்லையா?” என்று அவரிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த செஞ்சி மஸ்தான், “சலிப்பு என்பது தற்கொலைக்குச் சமம் என்று பெரியார் சொல்லியுள்ளார். செஞ்சி நகர மக்களுக்குச் சலிப்பு ஏற்படாத வகையில் நான் பணியாற்றினேன். மக்களுக்குச் சலிப்பு ஏற்பட நம் செயல்பாடுகள்தான் காரணமாக இருக்க முடியும். சிறுபான்மை, பெரும்பான்மை என்பதை மக்கள்தான் முடிவு செய்கிறார்கள். செல்வாக்கு, சூழ்நிலை அறிந்து வாய்ப்பளிப்பேன் என்றார் கலைஞர். அப்படித்தான் கட்சித் தலைமை எனக்கு வாய்ப்பளித்தது. தொடர்ந்து வாய்ப்பு வாய்ப்பு வழங்கி இன்று எனக்காக, ‘வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத் துறை’ என்ற துறையைத் தொடங்கி முதல்வர் என்னை நியமித்துள்ளார்” என்றார்.

காத்திருக்கும் பணிகள்

சுற்றுலா மையமாக அமைய வேண்டிய செஞ்சி, இன்னமும் எந்த முன்னேற்றமும் காணவில்லை. ராஜா தேசிங்குவுக்குச் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முந்தைய ஆட்சிகளில் நிறைவேற்றப்படவில்லை. ராஜா கோட்டைக்கும், ராணி கோட்டைக்கும் இடையில் ரோப் கார் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும் குடிநீர்ப் பற்றாக்குறை, முழுமையாகத் தீர்க்க முடியாத ஆக்கிரமிப்புகள், குப்பை கொட்ட இடம் தேர்வு செய்யாமல் சாலையோரம் கொட்டும் பரிதாப நிலை என இன்னும் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் செஞ்சியில் ஏராளமாக உள்ளன. தற்போது அமைச்சராக தந்தையும், பேரூராட்சித் தலைவராக மகனும் பதவி வகிப்பதால், இருவரும் இணைந்து செஞ்சியை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வார்கள் என்று செஞ்சிவாழ் மக்கள் காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.