கருணாநிதி நினைவு தினம்: பேரணியாகச் சென்று திமுகவினர் அஞ்சலி!

கருணாநிதி நினைவிடம் (கோப்பு படம்)
கருணாநிதி நினைவிடம் (கோப்பு படம்)

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அமைதி பேரணியாகச் சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதற்காக சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலையருகே கூடிய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர், அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து அமைதிப் பேரணியாகப் புறப்பட்டு மெரினா கடற்கரைக்குச் சென்றனர். வாலாஜா சாலை வழியாக முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஏ.வா.வேலு, செஞ்சி மஸ்தான், சேகர்பாபு உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 5,000-க்கு மேற்பட்ட திமுகவினர் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டனர்.

கருணாநிதியின் புகழைப் பாடும் பாடல்கள் வழி நெடுகிலும் ஒலிக்க, அனைவரும் அமைதியாக நடந்து சென்றனர். அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்ட பலரும் கறுப்பு சட்டை அணிந்திருந்தனர். முதல்வர் ஸ்டாலின் தூய வெள்ளை உடையில் பேரணியில் கலந்துகொண்டார். அவருக்கு இணையாக நடந்து வந்த கனிமொழி வெள்ளை நிறத்தில் கருப்பு நிற பார்டர் உள்ள சேலை அணிந்திருந்தார்.

திமுக மகளிர் அணியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கறுப்பு சேலை அணிந்து பெரும் திரளாகக் கலந்துகொண்டனர். அதேபோல தொண்டர் அணியைச் சேர்ந்தவர்கள் வெள்ளை நிறச் சீருடையில் அணிவகுத்து வந்தனர். சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி அமைச்சர்களுக்குப் பின்னால் நடந்து வந்தார். அவருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டவர்கள் நடந்துவந்தனர்.

அமைதிப் பேரணி கருணாநிதியின் நினைவிடத்தைச் சென்றடைந்ததும், அங்கு முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதற்காக கருணாநிதி நினைவிடம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in