கலக்கப்போகும் தேர்தல் அறிக்கை; களத்தில் இறங்கிய திமுக... பொதுமக்களை சந்திக்கிறது குழு!

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திமுக 3 குழுக்களை அமைத்து உத்தரவிட்டது. தேர்தலுக்கான கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒரு குழு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என அந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் அனைத்தும் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஒருபக்கம் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையைத் துவங்கியுள்ளனர். மற்றொருபுறம் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு

இந்த சூழலில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு, தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது போல், தமிழகம் முழுவதும் இந்த குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளனர்.

இதற்காகத் தொழில்முனைவோர், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைத்துத்தரப்பு மக்களையும் இவர்கள் சந்திக்க உள்ளனர். மேலும், இ-மெயில், தொலைப்பேசி, சமூக வலைத்தளம் வாயிலாகவும் தங்கள் கருத்துக்களைப் பகிரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த குழு நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு

அதன்படி, முதற்கட்டமாக 6-ம் தேதி கன்னியாகுமரி, 7-ம் தேதி மதுரை, 8-ம் தேதி தஞ்சாவூர், 9-ம் தேதி சேலம், 10-ம் தேதி கோவை, 11-ம் தேதி திருப்பூர் செல்கிறது. இரண்டாம் கட்டமாக 16-ம் தேதி ஓசூர், 17-ம் தேதி வேலூர், 18-ம் தேதி ஆரணி, 20-ம் தேதி விழுப்புரம், 21,22,23 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்த குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த நகரங்களுக்குக் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பிற்கு செல்வதற்கு முன்பாக, இக்குழு வருவதை உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதோடு, கோரிக்கை மனு பெறுவதற்கான இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்குக் கட்சித் தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த குழுவில் கனிமொழி தவிர்த்து, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in