திமுகவினர் சம்பாதிக்கத்தான் டாஸ்மாக்கில் விலை உயர்வே!

மது குடிப்போர் சங்கம் குற்றச்சாட்டு
திமுகவினர் சம்பாதிக்கத்தான்
டாஸ்மாக்கில் விலை உயர்வே!

திமுகவினர் சம்பாதிக்கத்தான் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மது குடிப்போர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மதுபானம் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முதல் மதுபானங்களின் விலையை தமிழக அரசு ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4396 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால், இதை விட கூடுதல் வருவாய் திமுகவினருக்குத் தான் போகிறது என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.செல்லப்பாண்டியன் குற்றம் சாட்டுகிறார்.

அது எப்படி அரசு வருவாய்க்குச் செல்கிற பணம், திமுகவினருக்குப் போகும் என்று அவரிடம் கேட்டதற்கு, ' 2003-ஆம் ஆண்டு டாஸ்மாக் தமிழகத்தில் துவங்கப்பட்ட போது 47 வகையான மதுபான வகைகள் தான் விற்கப்பட்டன. ஆனால், இன்றோ 450 வகையான மதுபானங்கள் விற்கப்படுகிறது. இந்த மதுபானங்களை உற்பத்தி செய்கிற ஆலைகளை ஆளுங்கட்சி செல்வாக்கு உள்ளவர்களைத் தவிர வேறு யாராவது அனுமதி வாங்கி நடத்திட முடியுமா? எனவே, அவர்களின் கல்லாப்பெட்டியை நிரப்பத்தான் இந்த விலையேற்றமே' என்று அவர் கூறினார்.

பி.செல்லப்பாண்டியன்
பி.செல்லப்பாண்டியன்

மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4396 கோடி ரூபாய் கிடைப்பது கூடுதல் வருமானம் தானே என்று நாம் கேட்டதற்கு, ' அரசு நடத்துகிற ஆவின், போக்குவரத்து ஆகியவற்றில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானம், அதில் பணியாற்றுகிற பணியாளர்களுக்குப் போகிறது. ஆனால், டாஸ்மாக் விற்பனைக்கு காரணமான மது பிரியர்களுக்கு இந்த வருமானத்தின் மூலம் என்ன கிடைக்கிறது? குறைந்தபட்சம் மது பிரியர்கள் குடியில் இருந்து மீள்வதற்கான மையங்களை மாவட்டங்கள் தோறும் அரசு உருவாக்கியிருக்கிறதா? எனவே, மதுபிரியர்கள் மூலம் கிடைக்கும் நிதி, வேறு திட்டங்களுக்குத் தான் பயன்படுத்தப்படுகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் தண்டனை முடிந்த பின் திருந்தி வாழ, அரசு சார்பில் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் புனர்வாழ்வு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், மது பிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ, இறந்து போனாலோ அவர்கள் குடும்பங்களைக் காக்க அரசு ஏதாவது நிதி உதவி செய்கிறதா? டாஸ்மாக் மதுபான ஆலைகள் மூலம் மட்டுமின்றி பார்களையும் எந்த கட்சி ஆள்கிறதோ அந்த கட்சி ஆட்கள் தான் குத்தகைக்கு எடுத்து சம்பாதிக்கிறார்கள். ஆவின் பார்களை அரசு நடத்துவது போல, டாஸ்மாக் பார்களையும் அரசு நடத்த வேண்டியது தானே? செய்ய மாட்டார்கள். ஏனெனில், கட்சிக்காரன் சாம்பாதிக்க வேண்டும். எனவே, இந்த விலையேற்றமே திமுகவினருக்காக செய்யப்பட்டது தான் ' என்று அவர் கூறினார்.

உங்கள் சங்கம் சார்பில் ஏதோ போராட்டம் நடத்தப்போவதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு,' ஆமாம். இந்த பட்ஜெட்டில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மது பிரியர்கள் நல்வாழ்விற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் ஏப்ரல் மாதம் சாத்தூரில் மாநிலம் தழுவிய அளவில் மது பிரியர்கள் மாநாடு நடைபெறும். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்' என்று பதிலளித்தார்.

மது குடிப்பதால் உடல்நலன் பாதிக்கிறது என்று கூறுகிறீர்கள். அப்படியென்றால் மது விற்பனை தடை செய்யச் சொல்லலாமே என்று செல்லப்பாண்டியனிடம் கேட்டதற்கு, 'மதுபிரியர்கள் மது குடிக்கவில்லையென்றால் தமிழக அரசே இயங்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரிப்பதற்கு காரணம் மது பிரியர்கள் தான். எனவே, நாங்கள் மது குடிக்காதே என்பதை விட குறைத்து குடியுங்கள் என்கிறோம். தமிழகத்தில் மது பிரியர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. விலை அதிகம் வைத்து விற்கப்படுவதைத் தட்டிக்கேட்க சட்டம் தேவை. கடந்த 2006-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்தில் மது சேர்க்கப்பட்டது. ஆனால், மதுபான ஆலை முதலாளிகள் மும்பை, ஜபல்பூர் நீதிமன்றங்களில் வழக்குப்போட்டு இந்த சட்டத்திற்கு தடை வாங்கி விட்டனர். எனவே, மன்மோகன் செய்யாததை, மோடி செய்ய வேண்டும். அதற்கு உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்தில் மதுவை சேர்க்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ' என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in