விசிக, ஐயுஎம்எல், கொமதேக கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? - அறிவித்தது திமுக!

திமுக தேர்தல் குழு
திமுக தேர்தல் குழு

விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற கட்சிகளுடனான கூட்டணி பேச்சு வார்த்தைக்கு வரும் 12ம் தேதி திமுக அழைப்புவிடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் - திமுக பேச்சு வார்த்தை குழு
மார்க்சிஸ்ட் - திமுக பேச்சு வார்த்தை குழு

மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தை தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இன்னும் முழுமையான அளவு பேச்சு வார்த்தை துவங்கப்படவில்லை. அதே நேரம் டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள திமுக தொகுதிப் பங்கீட்டு குழு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையை நிறைவு செய்துள்ளது.

ஆனால், இதுவரை எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்தும், எந்த தொகுதி என்பது குறித்தும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. ஆனால், இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்த தொகுதி என்பது இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக - கூட்டணி கட்சிகள்
திமுக - கூட்டணி கட்சிகள்

இந்நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த சூழலில் இக்கட்சி நிர்வாகிகளை வரும் 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த, திமுக தரப்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார். அவர் வரும் 7ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார். அதைத்தொடர்ந்து, அவருடன் ஆலோசனை நடத்திய பிறகு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். அதேநேரம், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அக்கட்சியைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலினே முடிவெடுப்பார் என அமைச்சர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in