திமுகவிடம் இத்தனை தொகுதிகள் கேட்டுள்ளோம்... பேச்சுவார்த்தைக்குப் பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நம்பிக்கை!

பி.சம்பத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பி.சம்பத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திமுகவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சு வார்த்தைக் குழு தலைவர் பி.சம்பத் தெரிவித்துள்ளார்.

திமுக - மார்க்சிஸ்ட் பேச்சு வார்த்தை
திமுக - மார்க்சிஸ்ட் பேச்சு வார்த்தை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. திமுக கட்சியின் பொருளாளர் டி ஆர் பாலு தலைமையிலான திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எம்.பி., ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தைக் குழுவில் மத்தியக் குழு தலைவர் பி.சம்பத், மத்திய செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், என்.குணசேகரன் ஆகியோர் திமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், கடந்த முறை கோவை, மதுரை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இம்முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர். அத்துடன் உத்தேச தொகுதிகள் பட்டியலையும் திமுக குழுவிடம் கொடுத்துள்ளனர்.

திமுக - மார்க்சிஸ்ட் பேச்சு வார்த்தை
திமுக - மார்க்சிஸ்ட் பேச்சு வார்த்தை

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு வார்த்தை குழு தலைவர் பி.சம்பத், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்து கொள்வது தொடர்பாக திமுக குழுவினருடன் இன்று நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக நடைபெற்றது, இரு தரப்பினரும் மனம் திறந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். ஒவ்வொரு கட்சியினரும் கூடுதல் இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பார்கள்.

நாங்களும் கடந்த முறையை விட தற்போது கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்று எங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்தோம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது, கட்டாயமாக இரண்டு தரப்புக்கும் ஏற்ற சுமுகமான உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என அவர் கூறினார். மேலும், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தானால் மிகவும் நல்லது என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in