`ஒரு சூரியன் தமிழகத்தை ஆளுகிறது; இன்னொரு சூரியன் ஆளுநராக உள்ளது'

தருமபுர ஆதீனத்தின் சமரச உரை
`ஒரு சூரியன் தமிழகத்தை ஆளுகிறது; இன்னொரு சூரியன் ஆளுநராக உள்ளது'
தருமபுர ஆதீனத்திற்குள் நடைபெற்ற விழாவில் ஆதீனகர்த்தர் மற்றும் ஆளுநர்

தமிழ்நாட்டில் இரண்டு சூரியன்கள் உள்ளது, அவற்றில் ஒரு சூரியன் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது, இன்னொரு சூரியன் தமிழக ஆளுநராக உள்ளது என்று தர்மபுரம் ஆதீனகர்த்தர் சமரச உரையாற்றியிருக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று வந்திருந்த தமிழக ஆளுநர் ரவி திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து வந்திருந்த ஆளுநர் ரவி, கோ பூஜை, கஜ பூஜை செய்து சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு ஆலயம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அதனையடுத்து தருமபுர ஆதீனத்தை வந்தடைந்த அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்பளித்தனர். தருமபுரம் ஆதீனம் வாசலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆளுநர் ஆசி பெற்றார்.

ஆளுநருக்கு தருமையாதீனம் சார்பில் நடராஜர் உருவச்சிலை வழங்கப்பட்டது. அதனையடுத்து ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார். பின்னர் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆதீனகர்த்தர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், "தமிழக ஆளுநரின் பெயர் ரவி. ரவி என்றால் சூரியன் என்று அர்த்தம். ஆளுகிற ஆட்சியாளர்களின் சின்னமும் சூரியனாக உள்ளதால் தமிழகத்திற்கு இரண்டு சூரியன்கள் உள்ளன" என்று தமிழகத்தை ஆளும் திமுகவையும் கருணாநிதியையும் ஒப்பிட்டு பேசினார். அவர் மேலும் பேசியதாவது, "மறதி ஒரு வரம். மறதி இருந்தால் மட்டுமே மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடியும். பசுக்களைப் பராமரிக்க வேண்டும். கால்நடைகளை சரியாக பராமரிக்காததால் கரோனா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால்தான் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சீர் கெட்டுப் போயுள்ளது. அதனால் கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும்" என்றார்.

அவரைத்தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ரவி, "இங்குள்ளவர்களை பார்க்கும்போது உண்மையான இந்தியா என் கண்முன்னே தெரிகிறது. இந்திய நாடு வளமான நாடு. தருமபுர ஆதீனம் நாட்டு மக்களுக்கும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல்வேறு சேவைகளை ஆற்றி வருவது சிறப்புக்குரியது. குறிப்பாக இக்கட்டான சூழ்நிலைகளில் கரோனா போன்ற இயற்கை இடர்பாடுகள், கார்கில் போர் நடைபெற்றபோது தாமாக முன்வந்து பல்வேறு உதவிகளை செய்தது பாராட்டுக்குரியது.

இந்தியாவின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. உலகில் உள்ள மக்கள் இயற்கை இடர்பாடுகள், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அனுதினமும் சந்தித்து வருகிறார்கள். இதற்குத் தீர்வு நாகரிகம், கலாச்சாரம், கல்வி, நீதிபோதனைகள், பண்பாடு உள்ளிட்டவற்றால் மட்டுமே முடியும்.

மதத்தால், மொழியால் உணவால் இந்தியர்கள் பிரிந்திருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பம். இந்தியாவினுடைய ஆன்மிகம் தமிழகத்திலிருந்து தொடங்கப்பட்டது" என பேசினார்.
அதனைத்தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட ஆதீனகர்த்தரின் ஞானயாத்திரையை ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.