தமிழக ஆளுநரின் அதிகாரம் பறிப்பு: துணைவேந்தர்களை நியமிக்கும் சட்டமசோதா நிறைவேற்றம்

தமிழக ஆளுநரின் அதிகாரம் பறிப்பு: துணைவேந்தர்களை நியமிக்கும் சட்டமசோதா நிறைவேற்றம்

துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.

கடந்த ஜனவரி மாதம் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும்" என்று உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், 2022-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்து வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்," உயர் கல்வியில் மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கியுள்ளது. இது மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறது. அது சர்ச்சைக்கு வித்திடும். ஆளுநர்- அரசுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும்" என்று கூறினார்.

மேலும்," பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மாநில அரசு தான் துணைவேந்தரை நியமிக்கிறது. கர்நாடகா, தெலங்கானாவில் இதே நிலை தான். குஜராத் மாநிலம் போல் தமிழகத்திலும் மாநில அரசே துணைவேந்தரை நியமிக்கும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் நெருடல் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒரு மனதாக சட்ட முன்வடிவை நிறைவேற்றித் தர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட், விசிக, பாமக, கொமதேக, மமக, மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in