கரோனா பரவல் குறைவு: சிறைவாசிகளை பார்க்க கட்டுப்பாடுகள் தளர்வு -சிறைத் துறை அறிவிப்பு

கரோனா பரவல் குறைவு: சிறைவாசிகளை பார்க்க கட்டுப்பாடுகள் தளர்வு -சிறைத் துறை அறிவிப்பு
புழல் சிறையில் கரோனா கேர் பகுதிதி இந்து (கோப்புப் படம்)

கரோனா பரவல் குறைந்து வருவதால், சிறைவாசிகளைப் பார்க்க கட்டுப்பாடுகளைத் தளர்த்தி சிறைத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்த நிலையில், சிறைவாசிகளுக்கு தொற்றுப் பரவலைத் தடுக்கும்விதமாக சிறைத் துறை நிர்வாகம் கடந்த ஜன.13-ம் தேதி முதல், சிறைவாசிகள் சந்திப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்ததை அடுத்து, கடந்த பிப்.8 முதல் சிறைவாசிகளை சந்திக்க கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியளிக்கப்பட்டது. அதன்படி ஒரு நேரத்தில் ஒரு பார்வையாளர் மட்டும் 15 நாட்களுக்கு ஒருமுறை சிறைவாசிகளை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி, புதிய வழிகாட்டுதல்களை சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி சிறைவாசிகளுக்கு வாரம் ஒருமுறை நேர்காணலுக்கு அனுமதி வழங்கப்படுவதுடன், இனிவரும் நாட்களில் சிறைவாசிகளை சந்திக்க 2 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 முதல் மாலை 4 மணிவரை நேர்காணலுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், நேர்காணலின்போது சிறைவாசிகளைக் காணவரும் பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணம் அல்லது 72 மணி நேரத்துக்குள் RT-PCR பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் சான்று ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், ஏற்கெனவே சிறைவாசிகள் நேர்காணலுக்காக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.