35 ஆண்டுகளாக சிறை வாழ்க்கை: வீரப்பனின் அண்ணன் மாதையன் மரணம்

35 ஆண்டுகளாக சிறை வாழ்க்கை: வீரப்பனின் அண்ணன் மாதையன் மரணம்
மாதையன்

கோவை மத்திய சிறையில் கைதியாக இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் உடல்நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.

சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன். இவர் கடந்த 1987-ம் ஆண்டு சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அப்போது கர்நாடக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன், சத்தியமங்கலம் ரேஞ்சர் கொலை வழக்கு தீர்ப்புக்கு பின்பு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மற்றும் சேலம் மத்திய சிறைகளில் மாறி மாறி இருந்து வந்த மாதையன் கடந்த 7 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அதனால் அவர் இருதய நோய் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத நிலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இவரை விடுதலை செய்ய வேண்டும் என அவ்வப்போது சில அரசியல் கட்சியினரும் கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மாதையன் அவ்வப்போது சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அவருக்கு அவ்வபோது பரோலும் வழங்கப்பட்டு வந்தது. இதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . அவர்கள் மருத்துவமனைக்கு வந்து மாதையனை உடனிருந்து கவனித்து வந்தனர்.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் 24 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மாதையன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது .

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in