
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் வயது முதிர்ச்சி காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். கருணாநிதி வயது முதிர்ச்சியால் உடல் நலம் பாதிக்கப்பட்ட போதே தயாளு அம்மாளின் உடல் நலனும் பாதிக்கப்பட்டது. கருணாநிதி மறைவுக்குப் பின்னர் தயாளு அம்மாள் எந்த நிகழ்ச்சிக்காவும் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை.ஞ
முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்று வந்தார். சமீபத்தில் தனது பிறந்தநாளையொட்டி கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். பல்வேறு உடல் உபாதைகளால் சிரமப்பட்டு வரும் தயாளு அம்மாளுக்கு வீட்டிலேயே சில சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக தயாளு அம்மாள் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனை வந்து தாயாரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.