மீண்டும் சைக்கிள் ரோந்துப் பணி!

சென்னை காவல் ஆணையரின் அசத்தல் திட்டம்
மீண்டும் சைக்கிள் ரோந்துப் பணி!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, காவலர்கள் பெரும்பாலும் சைக்கிளில் பணிக்கு வந்து செல்வதுடன் சைக்கிளிலேயே ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். காவலர்களின் உடல் அரோக்கியத்தைப் பேணுவதிலும், குறுகலான வழிகளில் சென்று கண்காணிப்புப் பணிகள், குற்றத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வதிலும் சைக்கிள் ரோந்துப் பணி முக்கியமானதாக இருந்தது.

காலப்போக்கில், காவலர்கள் இருசக்கர மோட்டார் வாகனம் மற்றும் காரில் பணிக்கு வரத் தொடங்கினர்.

இந்நிலையில், மீண்டும் சைக்கிளில் ரோந்துப் பணியில் காவலர்களை ஈடுபடுத்த திட்டமிட்டிருக்கிறார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.

அவரது உத்தரவின் பேரில் தினமும் சைக்கிள் ரோந்து பணி மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் இன்று (டிச.8) நடைபெற்றது.

அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட உத்தரவுகள்:

ஒரு காவல் நிலையத்தில் 4 காவலர்கள் தினமும் மாலை நேரத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். ரோந்துப் பணிக்குச் செல்லும் காவலர்கள், சீருடை மீது வேறு சட்டை அணிந்து செல்ல வேண்டும்.

குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்க்கெட், பேருந்து நிலையம் போன்ற இடங்களைத் தேர்வு செய்து செல்ல வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் உள்ள காவலர்களை ரோந்துப் பணிக்கு அனுப்ப வேண்டும். ரோந்துப் பணிக்குச் செல்லும் காவலர்களுடன் சைக்கிளில் செல்ல விரும்பும் ஊர்க் காவல் படை மற்றும் தன்னார்வலர்களை உடன் அனுப்ப வேண்டும்.

மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் துணை ஆணையர்கள் தலைப்பு ஓன்றைத் தேர்வு செய்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்த வேண்டும். அதற்குத் தேவையான பொருட்கள், பிரச்சாரப் பலகைகள், ஒலிபெருக்கி கருவிகள் உள்ளிட்டவற்றை, கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு தயார் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக வாரம் ஒரு முறை இணை ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, துணை ஆணையர்கள் தேர்வு செய்யும் தலைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். சைக்கிள் ரோந்துப் பணிகளுக்குச் செல்லும் ஆயுதப்படை காவலர்களைத் துணை ஆணையர்களே தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டில்கூட, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டு ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. நாளடைவில் சைக்கிள் ரோந்துப் பணி கிடப்பில் போடப்பட்டதால் பல காவல் நிலையங்களில் சைக்கிள்கள் பராமரிப்பின்றி பழுதாகி நிற்கின்றன.

இந்த நிலையில் மீண்டும் சைக்கிள் ரோந்துப் பணி மேற்கொள்ள சென்னை காவல் துறையினர் திட்டமிட்டிருப்பதால், பராமரிப்பின்றி உள்ள சைக்கிள்களைக் கணக்கெடுத்து, அவற்றைப் பழுதுநீக்கும் பணிகளைக் காவல் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்குப் புதிய சைக்கிள்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in