நெடுஞ்சாலைத்துறையில் கிளம்பிய ஊழல் பூதம்!

திமுக ஆட்சியிலும் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷனா?
நெடுஞ்சாலைத்துறையில் கிளம்பிய ஊழல் பூதம்!

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாய், கரூர் நெடுஞ்சாலைத்துறையில் வேலை செய்யாமலே 3 கோடி ரூபாய் சுருட்டிய விவகாரத்தைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் பல அரசுத்துறை அதிகாரிகள் சிக்கியுள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மக்கள் சபைக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, “ கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷனில் தான் அதிமுக அரசு முதலிடம்” எனத் தொடர்ந்து பிரச்சாரத்தை முன்னெடுத்தார். தான் ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஊழல் அமைச்சர்களைச் சிறையில் தள்ளுவேன் என்றும் மக்களிடம் வாக்குறுதி அளித்தார். இதன்படி ஸ்டாலின் ஆட்சிக்கும் வந்தார். ஆனால், அவரது அமைச்சரவையில் உள்ள ஒரு துறையில் தமிழகம் முழுவதும் வேலையே செய்யாமலேயே பல கோடி ரூபாய் சுருட்டப்பட்ட விவகாரம் அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் திமுக ஆட்சி வந்த பின் நெடுஞ்சாலைத் துறையில், 170 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டது. இதில், திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மட்டும், 130 கோடி ரூபாய் அளவில் ஒப்பந்தம் பெற்றதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

அதிமுக ஆட்சி காலத்தில் ஈசநத்தம் முதல், வீரியப்பட்டி, மண்மங்கலம் முதல் நன்னியூர்புதூர், புகளூர் சர்க்கரை ஆலை முதல் சேலம் பைபாஸ் சாலை உட்பட பல்வேறு சாலைகள் அமைக்கப்பட்டன. அங்கு, புதிதாக சாலைகள் அமைக்கும் பணியோ அல்லது சீரமைக்கும் பணியோ நடைபெறாமலே அதிகாரிகள் உதவியுடன் ரூ.10 கோடி ரூபாய் அளவிற்கு பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 3 கோடி ரூபாய் அளவு ஊழல் நடந்ததாக மாவட்ட ஆட்சியர் மட்டுமன்றி ஆளுநர் வரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புகாரைத் தட்டி விட்டார்.

இந்த நிலையில் கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், கிழக்குப் பிரிவு இளநிலை பொறியாளர் பூபாலசிங், கோட்ட கணக்கர் பெரியசாமி ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதில் பாதிக்கப்பட்ட அதிகாரி ஒருவர், "நெடுஞ்சாலைத்துறையில் ஒரு திட்டத்தில் மட்டுமா ஊழல் நடந்துள்ளது? மற்ற திட்டங்களில் நடைபெறவில்லையா ?" என்று புலம்பிய செய்தி மேலிடம் வரை சென்றது.

இதையடுத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளரான தீரஜ்குமார் அறிவுறுத்தலின்படி புகாருக்கு உள்ளான ஒப்பந்ததாரர் மேற்கொண்ட அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

இதன் அடிப்படையில் கரூரைத் தொடர்ந்து ஈரோடு நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்ட பொறியாளர் நித்திலன், கரூர் உதவி கோட்டப் பொறியாளர் முகமது ரபீக், கரூர் உதவி பொறியாளர் தீபிகா, ஈரோடு கோட்டக்கணக்கர் சத்யா ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இப்படி ஒரே துறையில் திடீரென இத்தனை பேர் எப்படி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்ற விசாரணயைத் துவக்கினோம்.

ஒவ்வொரு ஆண்டும் நெடுஞ்சாலைத்துறைப் பணிகளுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒரு திட்டத்திற்கு நிதி கோரும் போது அந்த நிதியை அந்த நிதியாண்டுக்குள் செலவிட நினைக்கும் அதிகாரிகளால் தான் இந்த பிரச்சினையே நடந்துள்ளது. ஏனெனில், திட்டம் சார்ந்த நிதியில் செலவு போக மீதமுள்ள நிதியை விதிப்படி சரண்டர் செய்ய வேண்டும். ஆனால், அப்படி சரண்டர் செய்யும் போது சம்பந்தப்பட்ட உதவி கோட்டப் பொறியாளருக்கு தலைமை பொறியாளர் மெமோ தருவார் என்பதால், பெரும்பாலும் மீதமுள்ள நிதி சரண்டர் செய்யப்படுவதில்லை. இதன் காரணமாகத்தான் அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஒப்பந்தாரர்கள் கூட்டுடன் ஊழல் நடைபெறுகிறது. நடக்காத வேலைக்கு நடந்ததாக ஆவணங்கள் தயார் செய்யப்படுகிறது. அப்படி செய்து தான் தற்போது கரூர், ஈரோட்டில் பலர் சிக்கியுள்ளனர்.

ஒரு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் செலவு செய்யப்படாவிட்டால், அந்த வேறு திட்டங்களுக்கு ஒதுக்கும் அதிகாரம் பொறியாளர்களுக்கு இருப்பதால் தான் இப்படியான தவறுகள் நடக்க காரணமாகிறது. அதே போல பணியை உறுதி செய்யும் அதிகாரமும் அவர்களுக்கே உள்ளதால் பணி நடக்காமலே நடந்ததாக கணக்கும் காட்ட முடிகிறது.

இதே போலத்தான் தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் சாலை, பாலங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், பணிகள் செய்த ஒப்பந்தாரருக்கு பணம் கொடுப்பதற்கு முன்பு அவரின் நிதி கோரும் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட திட்ட இயக்குநரும் 15 நாட்களுக்கு மேல் ஆய்வு செய்கின்றனர். மேலும் நடைபெற்ற பணிகளை இவர்களே ஆய்வு செய்கிறார்கள். ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்ததாரருக்கு கருவூலத்திற்கு நிதி ஒதுக்கும் அதிகாரம் மட்டுமின்றி வேலைத்தன்மை ஆய்வு செய்யும் அதிகாரமும் கோட்டப் பொறியாளருக்கே வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட கோட்டப்பொறியாளர்கள் தான் கரூரிலும், ஈரோட்டிலும் ஊழல் நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் சிலரிடம் பேசிய போது, " தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறைப் பணிகளை அரசு ஆய்வு செய்ய உத்தரவிட்டால் 80 சதவீத பொறியாளர்கள் சிக்கும் நிலை ஏற்படும். காரணம் அரசியல்வாதிகள் நெருக்கடி தான். தற்போது ஊழல் நடைபெற்ற மாவட்டத்தில் தனக்குச் சாதகமான அதிகாரிகளை ஒப்பந்ததாரரே இடமாறுதல் செய்து கொண்டு வந்துள்ளார். நேர்மையான முறையில் நெடுஞ்சாலைத்துறையில் இடமாறுதல் நடைபெறுவதில்லை. இதுகுறித்தும் தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் நடைபெறும் ஆய்வு போல நெடுஞ்சாலைத்துறையிலும் நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் ஐஏஎஸ் அதிகாரியோ, குரூப் 1 அதிகாரியையோ நியமித்தால் ஊழல் செய்பவர்களுக்கு சிறிதளவாவது பயம் ஏற்படும். நெடுஞ்சாலைத்துறையில் தமிழகம் முழுவதும் ஓராண்டிற்குள் நடைபெற்ற ஊழல் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன் திமுக அரசு எனச்சொல்லும் நிலை ஏற்படும்" என்றனர்.

கரூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற்றதைப் போல தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டிற்குள் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த பணிமுறைகேடுகள் குறித்து தங்களுக்கு வேண்டப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மூலம் அதிமுக விபரங்களைச் சேகரிக்கத் துவங்கியுள்ளது. திமுகவின் நூறு நாள் ஆட்சியின் போது ஆளுநரிடம் ஊழல் முறைகேடு குறித்து புகார் மனு அளித்த அதிமுகவினர், நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல் விவகாரத்தை தற்போது ஆர்வமுடன் திரட்டத் துவங்கியுள்ளனர். இதே இவ்விஷயத்தில் பாஜகவும் விபரங்களைச் சேகரிக்கத் துவங்கியுள்ளதால், தர்ம சங்கடமான நிலைக்கு முதல்வர் தள்ளப்பட்டுள்ளார். என்ன செய்யப்போகிறார்?

Related Stories

No stories found.