மருத்துவக்கல்லூரியில் கரோனா பாதிப்பு 72 ஆக அதிகரிப்பு- ராதாகிருஷ்ணன்

மருத்துவக்கல்லூரியில் கரோனா பாதிப்பு 72 ஆக அதிகரிப்பு- ராதாகிருஷ்ணன்

சென்னை அருகே உள்ள சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கல்லூரியில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே சத்யசாய் மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. படிப்படியாக உயர்ந்து சுமார் 25 பேருக்கு மேல் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தகவலையடுத்து நேற்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினர்.

ஆய்வு முடிவுகளுக்குப் பின் இன்று மாலை ராதாகிருஷ்ணன் அவர்கள் செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல் கட்ட தகவலின்படி வெளிமாநிலத்திலிருந்து வந்த மாணவர்களால்தான் கரோனா தொற்று பரவியதாக தகவல் தெரிவிக்கிறார்கள். ஏப்ரல் கடைசி தினங்களிலிருந்து கரோனா பரவல் தொடர்ந்திருக்கிறது. நேற்று இரவு வரை 29 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். கல்லூரியில் உள்ள 927 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தோம். அதில் 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சத்யசாய் கல்லூரியில் மட்டும் மொத்தம் 72 பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். தற்போது அனைவரும் நலமாக இருக்கிறார்கள். மருத்துவமனையிலேயே அவர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு செய்து வருகிறோம். மேலும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

வெளி மாநிலங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்ப வந்தாலோ, கல்லூரியில் படிக்க வந்தாலோ அவர்கள் ஒரு வாரம் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தினமும் குறைந்த பட்சம் 12 ஆயிரம் பேருக்குச் சோதனை செய்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கரோனா சிகிச்சைக்கென தனியாக மருந்துகள் இல்லை. தற்போது அனைத்து விதமான மருந்துகளும் கிடைக்கின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கரோனா பரவல் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் 6 நோயாளிகள் மட்டுமே ஆக்ஸிஜன் துணையோடு சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். 11 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்ட 674 பேர் மற்றும் சத்யசாய் கல்லூரியில் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் தீவிர கண்காணிப்பு தொடரும்” என்றார்.

Related Stories

No stories found.