
"பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும். கரோனா பரவலை தடுக்க அரசு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. அதே நேரத்தில் தமிழகத்தில் பாதிப்பு சற்று உயர்ந்திருந்தாலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஒமிக்ரான் காரணமாக ஏற்பட்ட 3-வது அலையின் தாக்கம் பெருமளவில் இல்லை. எனினும் கடந்த ஒரு வார காலமாக வடமாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனவை கட்டுப்படுத்த நம் வசம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசிதான்.
ஏனெனில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் கூட பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. எனவே இனி வரும் வாரங்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக கரோனா பரவலை தடுக்க அரசு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.