ஆர்டிஐ அபராதத்தொகையை உயர்த்த பரிசீலனை: ஆணையர் தகவல்

ஆர்டிஐ அபராதத்தொகையை உயர்த்த பரிசீலனை: ஆணையர் தகவல்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்(ஆர்டிஐ) கீழ் அபராதத் தொகையை உயர்த்த வலியுறுத்தப்பட்டு வருவதாக மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ், மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார், மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தகவல் அறியும் சட்டம் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முன்பு 100 முதல் 250 மனுக்கள் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டது. ஆனால், தற்போது 500 முதல் 1000 வரை மனுக்கள் பெறப்படுகிறது.

மனுதாரர்களிடமிருந்து வரும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள பொதுதகவல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை உள்ளது" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " மனுதாரர்கள் அளித்த மனுவின் மீது 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பெறப்பட்ட மனுக்கள் மீது சரியான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தும் சரியான பதில் அளிக்கப்படாமல் இருந்தாலும், அதிகபட்சமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும். பொது தகவல் அலுவலர் மனுக்கள் மீது திருப்திகரமான முறையில் விளக்கம் அளிக்காத பட்சத்தில் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் இச்சட்டத்தில் வழிவகை உள்ளது. இந்த அபராதத் தொகையை உயர்த்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in