குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பின் உயிரிழந்த இளம்பெண்: அரசு மருத்துவர்கள் மீது உறவினர்கள் புகார்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பின் உயிரிழந்த இளம்பெண்: அரசு மருத்துவர்கள் மீது உறவினர்கள் புகார்
உயிரிழந்த வினோதினி

சென்னை முகலிவாக்கம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் குமார்(33). இவர் தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கும் வினோதினி (31) எனபவரும் இடையே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சோனியா(6) என்ற மகளும் 6 மாதத்தில் மோனிஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் மே 29-ம் தேதி வினோதினி வளசரவாக்கம் சின்ன போரூர் பூத்தபேடு அரசு மகப்பேறு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து வினோதினி கடந்த புதன்கிழமை (ஜூன் 1) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

மறுநாளே வினோதினிக்கு மலக்குடலில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அதே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு வினோதினி மேல்சிகிச்சைக்காகப் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் 3-ம் தேதி தனியார் மருத்துவமனையில் இருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வினோதினி நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் வினோதினி உயிரிழந்ததாகக் கூறி சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து வினோதினியின் உறவினர்கள் கூறுகையில், பூத்தபேடு அரசு மகப்பேறு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வினோதினிக்கு மருத்துவர்கள் தவறாக அறுவை சிகிச்சை செய்ததாகவும், அதனால் அவரது மலக்குடல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டினர். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இது குறித்து புகார் அளிக்க எஸ்ஆர்எம்சி காவல் நிலையத்துக்குச் சென்ற உறவினர்கள், அங்கு புகார் அளிக்காமல் நேற்று இரவு கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்று, வினோதினி மரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in