கருப்பு பட்டியலில் தரமற்ற பொங்கல் தொகுப்பு வழங்கிய நிறுவனங்கள்!

முதல்வர் ஸ்டாலின் அதிரடி
நியாய விலை கடைகளில் முதல்வர் ஆய்வு
நியாய விலை கடைகளில் முதல்வர் ஆய்வு hindu கோப்பு படம்

"பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழ காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான ஆய்வு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர்,

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பத்தினருக்கும் என மொத்தம் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட முதல்வர் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்கள் தரமானதாகவும், எண்ணிக்கை குறைபாடு இல்லாமலும் இருக்க வேண்டுமென்பதில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, அதற்கு முறையான விதிமுறைகளை வகுத்து, அதன்படி பொங்கல் தொகுப்பு பையினை விநியோகம் செய்திட ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

பொங்கல் பரிசு பொருட்கள்
பொங்கல் பரிசு பொருட்கள்hindu கோப்பு படம்

பொங்கல் பரிசு பொருட்கள் அனைத்தும் முறையாக திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம், சரியான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன; கடந்த ஆட்சி காலத்தில் 6 பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் 21 பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டன. மேலும், தற்போது வழங்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், அவை கூடுதல் எடையளவில் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நல்ல முறையில் நடைபெற்றிருந்த நிலையில், மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களில் சில குறைபாடுகள் இருந்ததாக புகார்கள் அரசுக்கு வரப்பெற்றன. இவற்றை விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது; உரிய தரத்துடன் பொருட்களை வழங்க தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து பரிசு தொகுப்பு விநியோகம் குறித்து முதல்வர் இன்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்கள். இந்த ஆய்வு கூட்டத்தில், பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின்போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கினர். மேலும், தர கட்டுப்பாடு குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

விரிவான ஆய்வுக்கு பின்னர், முதல்வர், பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழ காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார். பொது மக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டுமெனவும், அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டுமென்றும், தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதல்வர் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in