ஓட்டுப் போட போகமுடியலையே... அரசு பேருந்துகளை சிறைபிடித்த பயணிகள்: கிடுகிடுத்த கிளாம்பாக்கம்!

கிளாம்பாக்கத்தில் பயணிகள் சாலை மறியல் போராட்டம்
கிளாம்பாக்கத்தில் பயணிகள் சாலை மறியல் போராட்டம்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்குத் திரும்பிய பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் சாலை மறியல் மற்றும் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேருந்து சிறைபிடித்து வாக்குவாதம்
பேருந்து சிறைபிடித்து வாக்குவாதம்

18 வது மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி உட்பட 102 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. அதனால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். 

சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பலரும் கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் இருந்து  புறப்பட்டு சென்றுள்ளனர்.  இதன் காரணமாக நேற்று மாலை முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டன. பல ஊர்களுக்கும் பேருந்துகள் அதிகம் இல்லை. இருக்கும் பேருந்துகளில் கூட்டம் முண்டியடித்ததால் பயணிகளால் ஏற இயலவில்லை. இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் திருச்சி, விழுப்புரம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அங்கிருந்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகியவை முடங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி துணை ஆணையர் தலைமையிலான போலீஸார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றுப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்தனர். அதிக நேரம் அதிகாரிகள் அங்கேயே இருந்து பயணிகளை  அவர்களைச் சொந்த ஊர்களுக்கு பேருந்தில் ஏற்றி  அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு இயல்புநிலை திரும்பியது.

அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும்போது இப்படி பேருந்துகள் பற்றாக்குறை ஏற்படுவது கிளாம்பாக்கத்தில் வழக்கமானதாக மாறிவருவதால் அதிகாரிகள் அதுபோன்ற காலங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கத் தயாராக வைத்திருக்க வேண்டும், எந்தப்பகுதிக்கு பேருந்துகள் தேவைப்படுகிறதோ அங்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in