வணிகரீதியாக பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதியில்லை!: ஆர்டிஐ வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்

வணிகரீதியாக பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதியில்லை!: ஆர்டிஐ வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி சேவை மற்றும் வணிகரீதியான பயன்பாட்டிற்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்த அரசு அனுமதி வழங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ மூலம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஊபர், ஓலா மற்றும் ராப்பிடோ போன்ற நிறுவனங்கள் பைக் டாக்ஸி போக்குவரத்து சேவையை தொடங்கி நடத்தி வருகின்றன. கால் டாக்ஸியில் செல்லும் கட்டணத்தை விட குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால் பைக் டாக்ஸி போக்குவரத்து சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் பைக் டாக்ஸி போக்குவரத்து சேவை மற்றும் இருசக்கர வாகனத்தை வணிகரீதியான பயன்பட்டுக்கு அரசு அனுமதியளிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஆர்டிஐ) மூலம் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறைக்கு கடிதம் அனுப்பினார். அதில், தமிழகத்தில் இருசக்கர வாகனத்தை வணிகரீதியாக பயன்படுத்த அனுமதி உள்ளதா? எத்தனை வாகனங்களுக்கு வணிகரீதியான பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், ஊபர், ஸ்விகி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிகரீதியான பயன்பாட்டிற்கு லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு ஆணையரக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு உதவி செயலாளர் பதிலளித்துள்ளார். அதில், "தமிழகத்தில் பைக் டாக்ஸி போக்குவரத்து சேவைக்கு இதுவரை தமிழக அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை. இவ்வகையான பயன்பாட்டிற்கு இதுவரை லைசன்ஸ் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், இருசக்கர வாகனத்தை டெலிவரி, வணிகரீதியான பயன்பாட்டிற்கு பயன்படுத்த அரசு அனுமதி வழங்கவில்லை" என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் அரசு அனுமதியின்றி பைக் டாக்ஸி போக்குவரத்து சேவை, வணிகரீதியான பயன்பாடு, டெலிவரி உள்ளிட்டவை செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி பழைய மலையம்பாக்கம் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது ஓலா பைக் டாக்ஸி மோதியதில் டூவீலரில் பயணம் செய்த மேற்கு தாம்பரத்தை சேர்ந்த பிரகாஷ்(24) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.