கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைனில்தான் தேர்வு!

மாணவர்களின் குழப்பத்தை தீர்த்த அமைச்சர் பொன்முடி
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி hindu கோப்பு படம்

கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டாலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போன்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில், அதை நிவர்த்தி செய்துள்ளார் அமைச்சர்.

தமிழகத்தில் கரோனா பரவல் உச்சம் தொட்டநிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அதேசமயம் இறுதியாண்டு மாணவர்கள், இறுதிப் பருவத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இதற்கிடையே தமிழகத்தில் கரோனா தொற்று சற்று குறைந்து வருவதால், பிப்ரவரி 1-ம் தேதி முதல், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் கரோனா பாதுகாப்பு மையங்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 1-ம் தேதி முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? நடைபெறாதா? என்று மாணவர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது.

தேர்வு எழுதும் கல்லூரி மாணவர்கள்
தேர்வு எழுதும் கல்லூரி மாணவர்கள்hindu கோப்பு படம்

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. “கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் கரோனா பரவலால் பிப்ரவரி 1-ம் தேதி ஆன்லைன் வழியாக நடைபெறும் என ஏற்கெனவே தெரிவித்து இருந்தோம். தற்போது கல்லூரிகள் திறக்கப்படுவதால், ஆன்லைன் தேர்வில் மாற்றம் ஏற்படுமா என பலர் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி நான் முதல்வர் ஸ்டாலினிடம் பேசியபோது, அவர் கல்லூரிகளில் முதல், மூன்றாம் மற்றும் ஐந்தாம் பருவ செமஸ்டர் தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் வழியாகவே நடைபெறும் என தெரிவித்தார். எனவே, ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதில் எந்த மாற்றமும் இல்லை. மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம்.

கல்லூரி மாணவர்களுக்கு 1, 3, 5-வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும். செய்முறைத் தேர்வுகளுக்காகவே மாணவர்கள் நலன்கருதி பிப்ரவரி 1-ல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஆன்லைன் தேர்வு இல்லாத நாட்களில் செய்முறைத் தேர்வுக்காக மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in