
’பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை தொடர்பான அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு’ என்ற பெயரில் நடந்த வசூல் வேட்டை தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் குறைவான மதிப்பூதியத்தில் வேலை செய்துவருகின்றனர். திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் எனவும் கூறியிருந்தது. இந்நிலையில் திருச்சியில் பகுதி நேர ஆசிரியர்கள் மாநாடு விரைவில் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாநாட்டிற்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோரையும் அழைத்துள்ளனர். இந்த மாநாட்டில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாகச் சொல்லி, பகுதி நேர ஆசிரியர்களிடம் ஒரு சிலர் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அதனை நம்பி சிலர் பணத்தையும் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கோவையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். தொடர் நடவடிக்கையாக, விசாரித்து உரிய அறிக்கை தருமாறு லஞ்ச ஒழிப்புத்துறையானது, பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவை கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.