இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை! வெள்ளக்காடான கோவை

கோவையில் தொடர் மழையால் நிரம்பி வழியும் நீர்வழித்தடங்கள்
கோவையில் தொடர் மழையால் நிரம்பி வழியும் நீர்வழித்தடங்கள்
Updated on
2 min read

கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முழுவதும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு 10 மணி அளவில் கனமழை துவங்கியது. விடிய விடிய தொடர்ந்து கன மழை பெய்ததால் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

உக்கடம் பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியது. இதனால் சாலை எது, பள்ளம் எது என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கோவை மாவட்டத்திற்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை கல்லூரிகளுக்கு வாகனங்களில் சென்ற மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேம்பாலங்களில் கீழ் நீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு - இடம் அவினாசி சாலை மேம்பாலம்
மேம்பாலங்களில் கீழ் நீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு - இடம் அவினாசி சாலை மேம்பாலம்

இதேபோல் தொடர் மழை காரணமாக கணுவாயில் உள்ள பள்ளம் முழுவதுமாக நிரம்பியுள்ளது. கடந்த பல வருடங்களாக இந்த பள்ளத்திற்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்திருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பள்ளத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று காலை கணுவாய் பள்ளத்தில் இருந்து வெள்ள நீர் சங்கனூர் பள்ளத்திற்கு காட்டாறாய் மாறி பாய்ந்து வருகிறது. இதன் காரணமாக கணுவாயிலிருந்து பன்னீர்மடை, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மாற்றுப்பாதையில் பல கிலோ மீட்டர் பயணித்து அவர்கள் நகருக்கு வந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதேபோல் நகரின் மையப் பகுதியில் உள்ள சங்கனூர் ஓடையிலும் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகும் நிலை உருவாகியுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனிடையே தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் இந்த தொடர் மழையால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் பெரும் சிக்கலுக்கு ஆளாகி வருகின்றனர். தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், தடாகம் அடுத்த பொன்னூத்து அம்மன் கோயில் அருகேயுள்ள பொன்னூற்று அருவியில் பல ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வெள்ளமாக கொட்டி வருகிறது.

 காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை
காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை

கோவை மருதமலை அருகேயுள்ள ஐஓபி செல்லும் சாலையில், காட்டாற்று வெள்ளம் காரணமாக, சாலையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு, குடியிருப்புவாசிகள் வெளியேற முடியாத நிலை உருவாகியுள்ளது. கனமழையால், மேம்பாலங்களின் கீழ் மழை நீர் தேங்கியுள்ளதால், நகரம் முழுவதும் கடும் வாகன நெரிசல் நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

கனமழை... இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

உஷார்... இன்று முதல் இந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது!

தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம்... சரக்கு போக்குவரத்து கடும் பாதிப்பு!

நெகிழ்ச்சி! சகோதரனின் குழந்தையை பெற்றெடுத்த பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in