”என்னை தெரியுமா?” : காரை விட்டு இறங்கி பெண் விவசாயிகளிடம் கேட்டார் ஸ்டாலின்

”என்னை தெரியுமா?” : காரை விட்டு இறங்கி பெண் விவசாயிகளிடம் கேட்டார் ஸ்டாலின்
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை பாப்பாப்பட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற முதல்வர் ஸ்டாலின் காரை விட்டு இறங்கி வயல்வெளிகளில் வேலைப்பார்த்த பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களது தேவைகளை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் மதுரை பாப்பாப்பட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (செப். 2) காலை புறப்பட்டார். திமுகவினர் அளித்த வரவேற்புக்குப் பிறகு, அவர்களை கிராம சபை கூட்டம் நடக்கும் இடத்திற்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டார்.

துறை அமைச்சர் என்ற அடிப்படையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தனது தனிச் செயலாளர் உதயச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோருடன் மட்டும் பாப்பாப்பட்டி கிராம சபை கூட்டத்திற்கு காரில் சென்றார்.

கடந்த சில வாரமாக பாப்பாப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் நல்ல மழை பெய்ததது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஸ்டாலின் பாப்பாப்பட்டிக்கு செல்லும் வழியெல்லாம் பச்சை பசேலேன்று காணப்பட்டது. வயல்வெளிகளில் பெண்கள், வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர். நாட்டார் பட்டி அருகே சென்றபோது அங்குள்ள வயல்வெளிகளில் வேலைப்பார்த்த பெண்களை பார்த்ததும் காரை விட்டு இறங்கினார் ஸ்டாலின்.

அவர்களிடம், ”என்னை உங்களுக்குத் தெரியுமா?” என்றார் ஸ்டாலின் . அதற்கு அந்த பெண்கள் நெகிழ்ச்சியுடன், ”என்ன சார்! இப்படி கேட்டுப்புட்டீங்க, எங்க முதல்வர் நீங்க” என்றனர். ”சந்தோஷம்” என்ற ஸ்டாலின் தொடர்ந்து, ”அவர்களிடம் ஏதாவது என்னிடம் சொல்லனுமா?” என்று கேட்டார்.

அதற்கு அந்த பெண்கள் ”ஆமாம் சார், எங்களுக்கெல்லாம் வீடே இல்ல, மாடுகளை வெச்சுத்தான் பிழைப்பு நடத்துறோம். இன்னைக்கு வரைக்கும் மாட்டுத்தொழுவம்தான் எங்களுக்கு வீடு. இதனால் மழை, வெயிலுனு கஷ்டப்படுறோம். எந்த வசதிகளையுமே அதிகாரிகள் செய்து தரல. சொன்னோம்ன்னா, ’இந்தா பார்க்கிறேன், அந்தாப் பார்க்கிறேனு’ தட்டிக்கழிக்கிறாங்க. கொசுக்கடியில்தான் கிடக்கிறோம், எங்களுக்கு ஒன்னும் சொத்து சுகம் வேணாம். நிம்மதியாக பிள்ளைக்குட்டிகளோடு தூங்க ஒரு இடம் இருந்தாபோதும். நிம்மதியா விவசாயம் செஞ்சு, உழைச்சு பிழைச்சிக்குவோம்” என்றனர்.

அதற்கு, “உங்க பஞ்சாயத்து தலைவர் யாரு?” என்று ஸ்டாலின் கேட்டார். அதற்கு அவர்கள் திருப்பதி என்றனர். அதற்கு ஸ்டாலின், “உங்கள் கோரிக்களை என்னவென்று பார்க்க சொல்றேன்” என்று கூறி விடைப்பெற்று சென்றார். அதிகாரிகளை அழைத்து அவர்கள் கூறியவற்றை குறிப்பெடுக்கவும் அறிவுறுத்தினார்.

முதல்வர் ஸ்டாலினை சற்றும் எதிர்பாராமல் சந்தித்த மகிழ்ச்சியில் பெண் விவசாயிகள் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

Related Stories

No stories found.