வேன் விபத்தில் பலியான காவலர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

வேன் விபத்தில் பலியான காவலர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகில் வேன் விபத்தில் பலியான காவலர்களின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் பிரிவு பகுதியில் பாலப்பணிகளும், சாலை விரிவாக்கப் பணிகளும் நடந்துவருகின்றன. கடந்த நான்கு மாதங்களாக இந்தப் பணிகள் நடந்துவரும் நிலையில், சாலை ஆங்காங்கே தோண்டப்பட்டும், ‘டேக் டைவர்ஷன்’ எனும் பதாகைகளுடனும் உள்ளது. வழக்கமாக இந்த வழித்தடத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இது பரிச்சயம் என்றாலும், புதியவர்கள் சற்றே குழம்பிப் போகின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் ஒன்று, பாலம் வேலை நடப்பதால் பக்கவாட்டில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டிருப்பது தெரியாமல் தடுப்புச்சுவரின் மீது மோதி நின்றது. ஓசூரைச் சேர்ந்த அரியநாயகம் என்பவர் ஓட்டிவந்த இந்தக் கார் விபத்துக்குள்ளானாலும், பெரிய காயங்கள் ஏதுமின்றி அனைவரும் தப்பினர். அதேநேரம் கார் மிகவும் பழுதடைந்ததால் அதை மீட்க ரெக்கவரி வாகனம் தேவை என காவல் துறையிடம் அலைபேசி வழியே உதவிகோரினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் காவலர் தேவராஜ், புதுச்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்த சம்பவ இடத்திற்குச் சென்றனர். காரில் இருந்தவர்களுடன் விசாரணை நடத்திக்கொண்டிருந்த நிலையில் திருநள்ளாறு நோக்கி வந்துகொண்டிருந்த சுற்றுலா வேன், காவலர்கள் தேவராஜ், சந்திர சேகரன் ஆகிய இருவர் மீதும் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் இவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவரின் குடும்பத்தினருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும், உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in