இருட்டறையில் தேர்வு… புழுக்கத்தில் வியர்வை:- கொந்தளிக்கும் சென்னை மாணவர்கள்!

இருட்டறையில் தேர்வு… புழுக்கத்தில் வியர்வை:-  கொந்தளிக்கும் சென்னை மாணவர்கள்!

அரசுப் பள்ளியில் உள்ள தேர்வு அறையில் மின்விசிறி மற்றும் மின்விளக்கு இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டு தேர்வு எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் பேசி வெளியிட்ட வீடியோ அப்பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கின. தேர்வு தொடங்குவதற்கு முன்பாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசு தமிழக மின்வாரியத்திற்குச் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இந்த நிலையில் குரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு மின்வசதி இல்லாத காரணத்தால் மின்விசிறி மற்றும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. மின்சார வசதி இல்லாத அறைகளில் மாணவர்களைத் தேர்வு எழுதப் பள்ளிக் கல்வித் துறை எப்படி அனுமதித்தது என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அனைத்து வசதிகளும் நிறைந்த சென்னையில் இப்படி ஒரு பள்ளி இருப்பது வேதனையான ஒன்று.

சமூக ஆர்வலர் வி.சந்தானம்
சமூக ஆர்வலர் வி.சந்தானம்

இது குறித்து குரோம்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் வி.சந்தானம், "குரோம்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. அந்தப் பள்ளியில் 28 அறைகளில் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள். அதில் எட்டு தேர்வு அறையைத் தவிர மற்ற அறைகளில் மின்விசிறியும் இல்லை; மின்விளக்கும் இல்லை. இருளில் எப்படி தேர்வு எழுத முடியும்? கோடைக்காலம் என்பதால் மிகவும் புழுக்கமாகவும் இருக்கும்.

இதை மாணவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். மாணவர்கள் படும் துயரத்தைப் பெற்றோர்கள் இதை என்னிடம் தெரிவித்தார்கள். இதையடுத்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவிற்கும் வேண்டுகோள் வைத்திருக்கிறேன்" என்கிறார்.

மின்சார வசதி இல்லாத காரணத்தால் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு காலவிரயம் ஆகிறது. இதை ஈடு செய்ய அவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கத் தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

Related Stories

No stories found.