இது தோழர்களின் அரசாகத்தான் இருக்கும்: - மே தின விழாவில் முழங்கிய முதல்வர்!

மேதின நினைவுத் தூணுக்கு முதல்வர் மரியாதை
மேதின நினைவுத் தூணுக்கு முதல்வர் மரியாதை

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற தொழிலாளர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செஞ்சட்டையில் வந்து கலந்து கொண்டார். இந்த விழாவில், இது தோழர்களின் அரசாகத்தான் இருக்கும்” என்று முதல்வர் பேசியது கம்யூனிஸ்ட் தோழர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று காலையில் முதலில் அண்ணா அறிவாலம் வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த மே தின நினைவுத்தூண் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு சென்ற ஸ்டாலின், நேப்பியர் பூங்காவில் உள்ள மே தின நினைவு தூணுக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு, ஆ. ராசா, தயாநிதி மாறன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி, தொமுச தலைவர் சண்முகம் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

சிந்தாதிரிப்பேட்டையில் திமுக சார்பில் நடைபெற்ற தொழிலாளர் தின விழாவில் பேசிய முதல்வர், தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாக தி.மு.க அரசு விளங்கும் என்று குறிப்பிட்டார்.

செஞ்சட்டை கருப்பு பேன்ட் அணிந்து வரும் முதல்வர்...
செஞ்சட்டை கருப்பு பேன்ட் அணிந்து வரும் முதல்வர்...

அங்கு அவர் மேலும் பேசியதாவது: "ஏழைகளுக்காக, தொழிலாளர் தோழர்களுக்காக, பாட்டாளிப் பெருமக்களுக்காக, வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களுக்காக, அறிஞர் அண்ணா தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் நடத்திய ஆட்சியாக இருந்தாலும் எவ்வளவோ திட்டங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

விவசாய தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க கணபதியா பிள்ளை ஆணையம் அமைத்தது, நகர்ப்புறத் தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய கார்த்திகேயன் ஆணையம் அமைத்தது, விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகளை அவர்களுக்கே சொந்தம் ஆக்கித் தந்தது, மனிதனை மனிதனே வைத்து இழுக்கும் கை ரிக்‌ஷாவை ஒழித்து, அதற்கு மாற்றாக சைக்கிள் ரிக்‌ஷாவை அறிமுகப்படுத்தியது, அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப் படுத்தியது, அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியம் அமைத்தது இவை அனைத்தையும் செய்தது தி.மு.க அரசுதான்.

நாங்கள் பொறுப்புக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் தொழிலாளர் நலனுக்காக எத்தனையோ சிறப்பான திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம், தீட்டிக் கொண்டிருக்கிறோம், இன்னும் தீட்டப்போகிறோம். என்னுடைய மனதிற்கு நிறைவான பணிகளாக இவை அமைந்திருக்கிறது. பணிநேரம் முழுவதும் நின்று கொண்டே பணியாற்றி வரும் தொழிலாளர்ககுக்கு இருக்கை வசதி, அமைப்பு சாரா வாரியத்தில் உறுப்பினராக இருக்கும் 500 மகளிருக்கு ஆட்டோ ரிக்‌ஷா வழங்கிட ஒரு லட்சம் ரூபாய் மானியம், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தொழிலாளர்களுக்கு விபத்து உதவித் தொகையாக 1 லட்சம் ரூபாயாக இருந்ததை 2 லட்சம் ரூபாய் ஆக்கியது, மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகையை 6 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தியது, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகையை 20 ஆயிரம் என உயர்த்தியது எல்லாமே இந்த ஓராண்டில் நடந்தவை.

18 அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களிலும் கடந்த ஓராண்டில் மட்டும் 1,35,660 பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 247 கோடி ரூபாய் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி – அதையெல்லாம் உடனடியாக செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். எனது தலைமையிலான நமது அரசு தோழர்களின் அரசாகத்தான் இருக்கும். தொழிலாளர்களின் அரசாகத்தான் இருக்கும். தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அரசாகத்தான் இருக்கும்"

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் மே தின விழா உரையாற்றினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in