`தாங்கமுடியாத துயரம், துடிதுடித்துப் போனேன்'- தழுதழுத்த முதல்வர் ஸ்டாலின்

`தாங்கமுடியாத துயரம், துடிதுடித்துப் போனேன்'- தழுதழுத்த முதல்வர் ஸ்டாலின்

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையையும் அவர்களிடம் வழங்கினார். அதற்குப் பிறகு மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ``இன்று அதிகாலை நடந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் யாராலும் தாங்க முடியாத துயரத்தை தந்திருக்கிறது. இதை விளக்குவதற்கு வார்த்தைகள் இல்லை. கேள்விப்பட்டு மிகவும் வேதனைப்பட்டேன். துடி துடித்துப் போனேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

அதைத்தொடர்ந்து இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் பழனி மாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், நீலமேகம் போன்றவர்களையும், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அதிகாரிகளை மீட்பு பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று அரசின் சார்பில் நடைபெறும் மீட்பு பணிகள், நிவாரணப் பணிகளை கவனிக்க உத்தரவிட்டேன்.

அதைத்தொடர்ந்து காலையில் உயிரிழந்த 11 பேருக்கும் சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் விமானம் மூலம் மதுரை சென்று மதுரையிலிருந்து தஞ்சை வந்திருக்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் வீட்டுக்குள் சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அரசின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். இந்த தஞ்சாவூர் மண்ணின் மைந்தன் என்ற முறையில் அவர்களின் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன் என்று ஆறுதல் சொன்னேன்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக அரசின் சார்பில் ஐந்து லட்ச ரூபாயும், திமுக சார்பில் இரண்டு லட்ச ரூபாயும் வழங்கி இருக்கிறோம். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறவர்களையும் சந்தித்து ஆறுதல் சொல்லி, படுகாயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் ஒரு லட்ச ரூபாயும், லேசான காயத்துடன் சிகிச்சை பெற்றவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கி இருக்கிறோம். அவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க அறிவுறுத்தி இருக்கிறோம்.

இந்த விபத்து மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு, விபத்துக்கான சரியான காரணத்தை அறிந்து, வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று ஆய்வு செய்வதற்காக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இதை அரசியலாக்க வேண்டும் என்ற முயற்சி செய்கிறார்கள்.

இதையெல்லாம் அரசியல் ஆக்கக்கூடாது. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.